யாத்ரன் 10

யாவும் நின் யாத்ரனாய்..

EPISODE 10




யாத்ரனின் கரங்கள் அவளிடையை வளைத்து தன்னோடு அணைத்திருக்க, அவன் மேல் மொத்தமாக சாய்ந்திருந்தாள் ஜான்சி.


அவளுடைய மூளை செயலிழந்து  விட்டது போலும்!


தன்னிலை மறந்து அவன் மேல் தன் முழு உடல் உரச அவள் ஒட்டிக்கொண்டு நிற்க, யாத்ரனோ அவள் நழுவியது போல் உணர்ந்தானோ என்னவோ!


அவளிடையில் பதிந்திருந்த தன் கரத்தில் மீண்டும் அழுத்தம் கொடுத்து அவளை தன்னோடு இறுக்கிக்கொள்ள, பெண்ணவளின் உடலோ சிலிர்த்தடங்கியது.


அவளுடலில் ஏற்பட்ட நடுக்கத்தை தன் கரங்களின் ஆடவன் உணர்ந்தது போல சட்டென அவள் முகத்தைப் பார்த்தான்.


செதுக்கிய சிலை போல அவள் அவனையே பார்த்துக்கொண்டு நிற்க, அவள் வயதை கடந்து வந்தவனுக்கு அவள் உணர்வுகளை அறிய முடியாதா என்ன!


"ஊப்ஸ்... சா.. சாரி!" என சிறு தடுமாற்றத்தோடு சொன்ன யாத்ரன் அவளை தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தி, "சொன்னது நியாபகம் இருக்குல்ல, யோசிச்சு சொல்லு. உன்ன நீதான் காப்பாத்திக்கணும்" என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்துச் சென்றான்.


ஜான்சியோ அவன் பேசியது அத்தனையையும் மறந்து சற்று முன் நடந்த சம்பவத்தின் தாக்கத்தில் மெய் மறந்து அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருக்க, "ஹ்ர்ம் ஹ்ர்ம்..." என்ற ருக்மணியின் செருமல் சத்தம் பக்கத்தில் கேட்டது.


அவள் சுயநினைவுக்கு வந்து உடனே தோழியை கேள்வியாகப் பார்க்க, மற்றவளோ இடுப்பில் கைக்குற்றி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றிருந்தாள்.


"என்ன.. இல்ல என்னன்னு கேக்குறேன்.. குறுக்கால ஒருத்தி நின்னுக்கிட்டு இருக்கேன்னு கூட மதிக்காம உங்க பாட்டுக்கு ஏதேதோ பண்றீங்க. ஏய் ஜானு, நீ என் ஜிகிரி தோஸ்த்து அப்படிங்குற ஒரே காரணத்துக்காகதான் இந்த பரிகாரத்துல இருந்து உன்ன காப்பாத்த முயற்சி பண்றேன். எங்கொப்பா கனவுல வந்தாருன்னு அவர் சொன்ன கட்டுக்கதைய நம்ப நான் என்ன முட்டாபீஸா.." என்று நிறுத்தியவள் மீண்டும் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு பேச்சை தொடர்ந்தாள்.


"இங்க பாருடீ அடுத்து நீன்னு நினைக்கும் போது ரொம்பவே பயமா இருக்கு. இதுலயிருந்து நீ தப்பிச்சா ரொம்ப நல்லா இருக்கும்னு தோனுது. அதுமட்டும் இல்ல, அந்த ஆளு நம்ம ஜாதியே இல்லடீ. அவரு சர்ச்சுக்கு போவாங்களே அந்த ஆளுங்கள சேர்ந்தவராம். உனக்கு சொல்றது புரியும்னு நினைக்கிறேன்..." 


என்று ருக்மணி சொல்லி முடிக்க, அதைக் கேட்டு சற்று திகைப்பாக இருந்தாலும், இப்போது அவளுக்குள் பூத்திருக்கும் வயதுக்கான உணச்ச்சிகளோ 'அப்படி இருந்தால்தான் என்ன?' என்று வழக்கத்தை மீறி நினைக்கத் தூண்டியது.


அன்றிரவு, 


அர்ச்சனாவோடு சமையலறையில் நின்றிருந்த ஜான்சிக்கு இன்னும் அவனின் பிரத்யேக மணம் அவளை சுற்றியே இருப்பது போல ஒரு உணர்வு.


கூடவே, அவன் தொட்ட இடை இப்போதும் அவனின் ஸ்பரிசத்தை உணர்ந்து குறுகுறுக்க, மெல்ல இதழ் பிரித்து சிரித்தாள் அவள்.


அந்த சிரிப்பு அர்ச்சனாவின் விழிகளில் சரியாக சிக்கிக்கொள்ள, இதுவரைப் பார்க்காத மகளின் சிரிப்பில் அவருக்கோ ஆச்சரியம்.


"ஜான்சி, தனியா சிரிக்குற அளவுக்கு அப்படி என்ன கனவு காணுற. ஒருவேள யாரையாச்சும் விரும்புறியா என்ன! அவன் நல்லவனா மட்டும் இருந்தா அவன் கூட இந்த ஊரை விட்டே போயிரு, நீ உயிரோட இருக்கன்னு சின்ன சந்தோஷத்தோட நான் இருந்துப்பேன்.  சொல்லு சொல்லு.."


ஒரு தாய் தோழியாக மாறி கேட்டாலும் சங்கடப்பட்டு தன் மனதிலிருப்பதை மறைத்துக்கொண்டவளோ போலியாக பதற்றப்பட்டாள்.


"அய்யோ அம்மா அதெல்லா இல்ல, நீங்களா கற்பனை பண்ணிக்காதீங்க" என்று அவள் சொன்னதுமே அர்ச்சனாவின் முகம் தான் எதிர்பார்த்தது நடக்காதோ என்ற ஏமாற்றத்தில் சற்று வாடிப் போனது.


தன் அம்மாவின் எண்ணத்தை உணர்ந்துக்கொண்ட ஜான்சிக்கு மனதில் சிறு சந்தோஷம் எழுந்தாலும் இன்னொரு புறம் ஊரைப் பற்றிய பயம் இருக்கத்தான் செய்தது.


ஒருவரா இருவரா மொத்த ஊரையுமல்லவா அவள் எதிர்த்து நின்றாக வேண்டும்! 


ஊர் சட்டம் அவளுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன...


அன்றைய நாள் கழிந்து அடுத்த நாளும் விடிந்தது.


சூரியன் உச்சத்திலிருந்து மண்டையை பொழக்க, ஜம்மென்று பெரிய மரத்திற்கு கீழ் ஒய்யாரமாக தன் சகாக்களோடு அமர்ந்திருந்த கணபதியோ வெற்றிலையை சப்பிக்கொண்டு தன் முன் முட்டி போட்டு அமர்ந்திருந்தவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.


சுற்றி ஊர் மக்கள் கூடியிருக்க, யாத்ரனும் அங்குதான்..


"ஊரு ஏற்கனவே பஞ்சத்துல இருக்கு, அதுக்கான பரிகாரம் முடியாத நிலைமையில ஊருக்கு இவன் பண்ண காரியத்தால தோஷம் வேறு வந்துருச்சு. அத்தனை தடவை சொல்லியும் கேக்காம வாஸ்து பார்க்காம வீடு கட்டி மொத்த ஊரும் உன்னால இப்போ அவதிபட போகுது. அதனால பூசாரி சொன்னபடி இவனுக்கு மொட்டை அடிச்சு இவன் மொத்த குடும்பத்தையும் இன்னைக்கு ராத்திரியே பண்ண  தப்புக்கு பிரயாச்சித்தமா பூ மிதிக்க விட போறோம்" 


என நாட்டாமை உத்தரவு போட, "வாவ்.. ஃப்ளவர்ஸ் மேல நடக்க விடுறதையெல்லா தண்டனையா கொடுக்குற அளவுக்கு நல்லவனுங்களா இவனுங்க?" என்றான் யாத்ரன் ஆச்சரியக் குரலில்.


"எதே! ஃப்ளவர்ஸ் மேலயா.. என்ன சொல்ற" புரியாமல் கேட்ட வரதனுக்கு அப்போதுதான் மூளைக்கு உரைக்க, "ஹாஹாஹா... அது ஃப்ளவர்ஸ் இல்ல டியூட் அது என்னனா..." என்று சிரித்தபடி அந்த தண்டனையை விளக்கினான்.


"வாட் த ஹெல்.." என இடம் பொருள் பாராது கத்திய யாத்ரனுக்கு கோபம் மலையேற, மற்றவனோ "யாத்ரா வாய மூடு! மிதிக்க போறவனே அமைதியா இருக்கான்" என்று அவன் கரத்தைப் பற்றி அமைதிப்படுத்த முயற்சித்தான்.


ஆனால் இவன் விட்டால்தானே!


இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் இன்று வெடிக்க தயாராகி விட்டது. 


கணபதி உட்பட சுற்றியிருந்தவர்களின் பார்வை இவன் மேல் விழ, தோழனின் கரத்தை உதறிவிட்டு, "ஆப்ஜெக்ஷன் மிஸ்டர் ஊர் தலைவரே! இதெல்லா டூ மச்.. கடவுள் இதையெல்லா எதிர்பார்க்குறேன்னு உங்ககிட்ட சொல்லுச்சா? எந்த ஏங்கிள்ல இருந்து பார்த்தாலும் அவனெல்லா பூசாரியா தெரியல, எந்த கேஸ் போட்டாலும் பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தும். அப்படி இருக்கான் அவன் பேச்ச கேட்டுக்கிட்டு எத்தனை நாளைக்கு இந்த மூடநம்பிக்கையில மூழ்கி இருக்க போறீங்க? வெளியில வாங்க கம்மோன்!" என்று முடித்து ஒரு முறை சுற்றிப் பார்த்தான்.


அத்தனை பேரும் 'தங்களுக்கும் இந்த பேச்சுக்கும் சம்பந்தமே இல்லை' எனும் தோரணையில் அலட்சியமாக நின்றிருக்க, யாத்ரனுக்கு சப்பென்றானது.


'மூச்ச முட்ட பேசியும் எவனும் கண்டுக்குறான் இல்லயே' அவன் உள்ளுக்குள் பொறுமிக்கொண்டவாறு கடுப்பாக  நின்றிருக்க, அவனையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காதது போல் சப்பிக்கொண்டிருந்த வெற்றிலை எச்சியை துப்பிவிட்டு நகர்ந்தார் கணபதி.


சில பேர் அவனை வேடிக்கையாக பார்த்துவிட்டு செல்ல, கோபத்தில் காலை தரையில் உதைத்துவிட்டு சென்றவனை விழிகள் மின்ன பார்த்தாள் ஜான்சி.


இத்தனைநேரம் அவன் பேசியதை கேட்டுக்கொண்டு நின்றிருந்தவளுக்கு உள்ளுக்குள் ஆர்வம் எழ, சுற்றி முற்றி பார்த்தவள் யாரும் தன்னை கண்டுகொள்ளாததை உணர்ந்துவிட்டு அவன் பின்னே ஓடினாள்.


"என்னங்க நில்லுங்க... என்னங்க..." என்ற அவளின் கத்தலில் யாத்ரனின் கால்கள் சட்டென நிற்க, புருவ முடிச்சுகளோடு யாரெனத் திரும்பிப் பார்த்தான்.


ஓடி வந்து அவனெதிரே முட்டியில் கைகளை ஊன்றி ஜான்சி மூச்சு வாங்க நிற்க, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு அவளையே கூரிய பார்வைப் பார்த்திருந்தான் அவன்.


"நீங்.. நீங்க ரொம்ப நல்லா பேசினீங்க" என்று அவள் மனதார பாராட்ட, "அதான் யாரும் கண்டுக்கலயே" என்றான் அவன் அடக்கப்பட்ட கோபத்தோடு.


அவன் வெடுக்கென்று சொன்னதும் அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.


"அது... நீங்க பாட்டுக்கு சொல்லிட்டீங்க. எனக்கும் இப்போதான் தப்புன்னு புரியுது. எந்த கடவுளும் மனுஷங்கள கஷ்டப்படுத்தணும்னு நினைக்க மாட்டாங்க. ஆனா நான் ஒருத்தி இதை வேணாம்னு சொன்னா மட்டும் விட்டுருவாங்களா? ஆனா நீங்க சொன்ன மாதிரி உங்க கூட என்ன அழைச்சுட்டு போனீங்கன்னா..."


ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தவாறு இறுதி வசனத்தை அவள் ராகமிழுக்க, இடது புருவத்தை நீவி விட்டுக்கொண்டான் யாத்ரன்.


அவளோ அவன் முகத்தையே ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருக்க, "இதை பத்தி நாளைக்கு அந்த பழைய கோயில்ல பேசிக்கலாம், உங்கம்மா அறை விட்டாங்களே அந்த கோயில்" என்று கூறிக்கொண்டே நடந்துச் சென்றான்.


போகும் அவனை விழிகளில் காதலோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளோ அடுத்தநாள் அவனுடனான சந்திப்பை எதிர்பார்த்து விடியலுக்காக காத்திருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.


அவன் சொன்ன நேரத்திற்கு முன்னரே அந்த கோயிலுக்குள் வந்திருந்தவள் அவனுக்காக காத்திருக்க, யாத்ரனோ வந்தபாடில்லை. 


பத்து நிமிடங்கள், இருபது நிமிடங்கள் என நேரம் காலில் பம்பரத்தை கட்டி விட்டது போல் ஓட, கிட்டத்தட்ட அரைமணி நேரமாக அவனையே எதிர்பார்த்திருந்தவளுக்கு ஏமாற்றம்தான் மிச்சம்.


வாடிய முகமாக நகரப் போனவள் ஆடி அசைந்து அலைப்பேசியில் யாருடனோ பேசிய வண்ணம் உள்ளே நுழைந்தவனைப் பார்த்ததும்தான் மெல்ல இதழ் பிரித்து சிரித்தாள்.


"ஐ வில் கால் யூ பேக்" என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்த யாத்ரன், "ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?" என்று கேட்க, பாவமாக ஆமென தலையாட்டினாள் அவள்.


அவனோ ஒற்றைக் காலை மடக்கி தூணில் சாய்ந்துக்கொண்டவன், "இப்போ சொல்லு, இந்த ஊர் மூடநம்பிக்கைய இந்த ஊர்மக்கள எதிர்த்து நிக்க தயாரா இருக்கியா? குவீன் ஆஃப் ஜான்சியா உரிமைக்காக பொங்கியெழ தயாரா இருக்கியா?" என்று ஏதோ ஆர்மிக்கு ஆள்சேர்ப்பது போல் தீவிரமாகக் கேட்க, சிறு பயத்தோடே தலையாட்டினாள் ஜான்சி.


"அதான் உங்க கூட..." மீண்டும் ஆரம்பித்தவளுக்கு தன்னை இந்த நரகத்திலிருந்து விடுவிக்க மாட்டானா என்ற ஏக்கம்தான் உள்ளுக்குள் பெருகியிருந்தது. கூடவே இப்போது பூத்திருக்கும் காதலும். 


"என் கூட தாராளமா உன்ன கூட்டிட்டு போறேன். பட் அதுக்கு முன்னாடி சில ப்ரொசீஜர்ஸ் இருக்கு. படிக்க கூட விடாத இந்த ஊர்ல இருக்குற உன்கிட்ட கண்டிப்பா பாஸ்போர்ட் இருக்க போறதில்ல" 


இவன் தான் யூகித்தது தான் சரி என்பது போல பேசிக்கொண்டு போக, அதை மறுத்து ஒலித்தது அவளுடைய கொஞ்சும் குரல்.


"என்கிட்ட பாஸ்போர்ட் இருக்கு" என அவள் குறுக்கிட்டு சொன்னதும், ஆச்சரியத்தில் விழி விரித்தான் யாத்ரன்.


பள்ளிக்கூடம் பக்கமே செல்லாத இந்த ஊர் சிறு பெண்ணிடம் எப்படி என்ற பெருங் கேள்வி அவனுக்குள் தோன்றி ஆச்சரியத்தை உண்டாக்கியது.


"அது... ஒரு வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊருக்கு ஒரு கம்பனியால வந்தாங்க. வெளிநாட்டு வேலைக்காக பொம்பளைங்க வேணும், அதிகமா காசு தரேன்னு சொன்னாங்க. ஆனா சின்ன பொண்ணா வேணும்னு சொன்னதும் அப்பா என்னை அனுப்புறதுக்காக உடனே எல்லா ஏற்பாட்டையும் பண்ணாரு. அதுக்கப்பறம் கடவுள் புண்ணியத்துல அந்த கம்பனியாளுங்க தப்பானவங்கன்னு தெரிஞ்சுருச்சு. அப்போ பண்ணதுதான்"  


அவள் சொல்லி முடிக்க, யாத்ரனுக்கு 'இவன்லாம் அப்பனா!' என்று ஒரு பக்கம் நினைக்கத் தூண்டினாலும் இன்னொரு புறம் 'அப்பாடா!' என்ற நிம்மதி எழாமல் இல்லை.


"அப்போ சரி, விசா என்ட் டிக்கெட் மட்டும் போட்டா போதும். இன்னும் ஒரு வாரத்துல கெளம்பிரலாம்" என்று நிறுத்தியவன் எதையோ தீவிரமாக யோசித்துவிட்டு, "அதே ஒரு வாரத்துலதான் அடுத்த பௌர்ணமியும் வருது" என்றான் இறுகிய குரலில்.


அவன் சொன்னதைக் கேட்ட ஜான்சியின் முகத்தில் அப்பட்டமான பதற்றம் தெரிய, அவளுடைய உடலோ லேசாக நடுங்கத் தொடங்கியது.


"ப.. பயமா இருக்கு" என்றவளுக்கு வார்த்தைகள் தந்தியடிக்க, அவளின் நிலையை உணர்ந்தவனாக மெல்ல அவளருகில் நெருங்கினான் அவன்.


ஜான்சியின் கால்கள் அவன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து தானாக பின்னால் நகர, அவளுடலோ பின்னேயிருந்த தூணில் மோதி நின்றது.


தன் வலிய கரங்களால் அவளை இரு பக்கமும் அணைக்கட்டியவன், பயத்தில் அவளுடைய நெற்றியில் பூத்த வியர்வை துளிகளை உதட்டை குவித்து ஊதினான்.


அவனின் சூடான மூச்சுக்காற்றில் அவளுடல் சிலிர்க்க, அவளுடைய முகத்தை வருடிக்கொண்டிருந்த சிறு முடிக்கற்றைகளை தன் பெருவிரலால் அவள் காதோரம் மெல்ல ஒதுக்கினான்.


ஏற்கனவே அவன் மேல் காதல் வயப்பட்டிருந்த அவளின் மனமோ இப்போது அவனின் அருகாமையில் தடுமாறித்தான் போனது.


*********

என்னோட நான்கு ஆன்டி ஹீரோ கதைகளான 


தஷுரி

ரதியின் ரணதீரன்

கனவுகள் கனலாய் மாறுமா

வேல்விழி மொழிகள்


இந்த கதைகள Papr space Website appல April மாதம் வரைக்கும் ஃப்ரீயா படிக்கலாம்.. சோ மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. 


Here's the link 👇

https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4


என்னோட கதைகள ஆடியோ நாவலா கேக்கணும்னா... 

Channel name - kadhaikulla polaama


இப்போ விழி தீயிலொரு தவம் நாவல் ஆடியோ வடிவுல இருக்கு.. 


Channel    link 👇

https://youtube.com/@kadhaikullapolaama7612?si=BwNNnPMl514OHY2Y


 



Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚