யாத்ரன் 02
யாவும் நின் யாத்ரனாய்
Episode 02
"என் கரம் பிடிக்க தாம் எத்தனை தவங்கள் செய்ய வேண்டுமோ?" என்ற அந்த இனிமையான குரல் காதில் ஒலிக்க, "உங்க கரத்த பிடிக்கிறதுக்காக எத்தனை ஜென்மங்களும் தவம் இருக்க காத்துக்கிட்டு இருக்கேன் இளவரசி" என்றவனின் வார்த்தைகளில் அத்தனை காதலும் குறும்புத்தனமும் ஒளிந்துக் கொண்டிருந்தது.
அந்த அரண்மனை பால்கனியில் தொங்கிக்கொண்டு பேசிய ஆடவனின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அது சாட்சாத் யாத்ரனேதான்.
ஆனால், அந்த இளவரசியின் முகத்தை மட்டும் அவனால் பார்க்க முடியவில்லை. யார் அவள்?
உள்ளுக்குள் எழுந்த கேள்வியோடு அவள் முகத்தை காண முயற்சித்தான் யாத்ரன்.
ஆனால் அவனின் துரதிஷ்டம்!
கனவில் அந்த ஆடவனின் கரம் பால்கனி சுவரிலிருந்து நழுவ அவன் அலறிக்கொண்டே கீழே விழப் போக, இங்கு நிகழ்காலத்தில் அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான் அவன்.
நன்றாகவே பயந்துவிட்டான் போல!
அறை ஏசி குளிரையும் தாண்டி அவனுடைய உடல் வியர்வையில் குளித்திருக்க, யாத்ரனோ பெரிய மூச்சுகளாக விட்டு தன்னை ஆசுவாசப்படுத்த முயற்சித்தான்.
"ராத்திரி பாகுபலி, பொன்னியின் செல்வன்னு ராஜாக்கள் படம் ஏதாச்சும் பார்த்தேனா என்ன, வழக்கமா இல்லாம இது.. இது ரொம்ப வித்தியாசமா இருந்துச்சே. அந்த குரல்... அவ யாரு? இளவரசின்னா ப்ரின்சஸ்ல! அவளோட முகம் ஏன் எனக்கு தெரியல. ஓ காட்!"
சிறிதுநேரம் அப்படியே குழப்பத்தோடு அமர்ந்திருந்தவன், விழிகளை மட்டும் உயர்த்தி சுவற்றில் தொங்க விடப்பட்டிருந்த டிஜிட்டல் மணிக்கூட்டைப் பார்த்தான்.
அடுத்தகணம் அவனுடைய விழிகள் பிதுங்கிவிடுமளவிற்கு விரிந்தன.
"ஓ ஷீட்!" என்று தலையிலடித்துக்கொண்டு வேகவேகமாக குளியலறைக்குள் புகுந்து உடை மாற்றிவிட்டு வெளியே வந்தான் யாத்ரன்.
சரியாக ஆஃபீஸிற்கு செல்வதற்காக தயாராகி உணவு மேசையிலிருந்த அவனுடைய மாற்றாந் தந்தை ராஜ்தீப்பும் தாய் விதுஷாவும் மகனை அதிருப்தியோடு ஒரு பார்வைப் பார்க்க, அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
அவனைப் பார்த்ததும் அவனுக்கான உணவை பரிமாற வேலைக்கார பெண் ஓடிவர, "இட்ஸ் ஓகே டார்ல்ஸ்" என்று புன்னகையோடு சொன்னவன் அவனே உணவை தட்டில் வைத்து சாப்பிடத் தொடங்க, "ஹ்ர்ம் ஹ்ர்ம்..." என்று தொண்டையை செருமினார் விதுஷா.
"இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்குறதா உத்தேசம்?" என்று அவர் கேட்க, அவன் தந்தையோ தனக்கும் இந்த உரையாடலுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல உணவுத் தட்டில் முகத்தைப் புதைத்திருந்தார்.
"என்னை வேவு பார்க்குறத நீங்க நிறுத்துற வரைக்கும்..." என்று காட்டமாக பதிலளித்துவிட்டு விழிகளை நிமிர்த்தி ஒரு பார்வைப் பார்க்க, அவனை முறைத்துப் பார்த்தார் அவர்.
"சோ வாட்? உன்ன கேர் பண்ண கூடாதுன்னு சொல்றியா யாத்ரா" என்ற விதுஷாவின் கோபமாக கேள்வியில், தட்டை உதறிவிட்டு எழுந்து நின்றவன், "சின்ன வயசுலயிருந்து இல்லாத கேரிங் இப்போ எதுக்கு, அதுவும் என்னை நாள் பூரா வேவு பார்க்குறதுக்கு பேரு கேரிங்கா? நான் என்ன சின்ன பையனா. இனாஃப் மாம்! ஐ கான்ட் டோலெரேட் திஸ். அப்போவே நீங்க நல்ல அம்மாவா இருக்கல, இப்போ மட்டும்.." என்றுவிட்டு விறுவிறுவென தன் அறையை நோக்கிச் செல்ல, பெரியவருக்கு ஆத்திரம் பெருகியது.
"யாத்ரா ஸ்டாப்! உன் இஷ்டத்துக்கு பேசுற, ஒரு அம்மாவா நான் எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டேன்? சொல்லுடா.. யாத்ரா நில்லு" என்று விதுஷா கத்திய கத்தல்கள் எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாகிப் போக, அவன் கண்டுகொள்ளாத ஆத்திரத்தில் மேசையில் அடித்தவாறு எழுந்து நின்றார் அவர்.
"விது காம் டவுன்! தப்பு நம்ம மேலயும் இருக்கு. வேலை வேலைன்னு அவன் கூட நீ இருந்ததே இல்ல. ஐ ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட்" என்று ராஜ்தீப் நிதானமாக சொல்ல, ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுக்கொண்டவர், "வீ ஆர் கெட்டிங் லேட்" என நேரத்தைப் பார்த்துவிட்டு வேகமாக வெளியேற, சலிப்பாக தலையாட்டியவாறு மனைவியின் பின்னே சென்றார் அவர்.
சில நிமிடங்கள் கழித்து அறைக் கதவைத் திறந்தவனுக்கு வீடு வெறிச்சோடி இருப்பதைப் பார்த்து அப்போதுதான் நிம்மதி பெருமூச்சே வெளியானது.
அடுத்தகணமே ஒரு குறுஞ்செய்தியை மட்டும் தாயின் எண்ணிற்கு அனுப்பிய யாத்ரன், "இதை அவங்க பார்க்குறதுக்குள்ள ஐ வில் பீ அவுட் ஆஃப் த கன்ட்ரி" என்று வாய்விட்டே முணுமுணுத்தவாறு வீட்டிலிருந்து வெளியேறியிருக்க, இங்கு தான் தங்கியிருக்கும் அறையில் வேகவேகமாக தன் பொருட்களை தயார்படுத்திக் கொண்டிருந்தான் வரதன்.
"அய்யோ போச்சு போச்சு! வன் ஹவர்குள்ள நான் ஏயார்பார்டுக்குள்ள வேற இருந்தாகணுமே" என்று அவன் பதற்றமாக கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை எடுத்து வைத்தபடி கேப்பிற்கு அழைத்துக்கொண்டிருக்க, "மச்சி... ஐ அம் பேக்" என்றபடி உள்ளே நுழைந்தான் யாத்ரன்.
வரதனோ அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல், "ஏன்டா டேய் சும்மா சும்மா பப்பிள் கம் மாதிரி என் கூட வந்து ஒட்டிட்டே இருப்ப, ஊருக்கு போறேனே முன்னாடியே வந்து எனக்கு ஹெல்ப் பண்ணணும்னு தோனுச்சா? நீ வேணா பாரு, ஊருலயே இருந்துடுறேன், அப்போதான் என் அருமை புரியும் உனக்கு" என்று அலைப்பேசியை பார்த்தவாறு சொல்ல, மற்றவனிடமிருந்து பதிலே இல்லை.
"டேய் கார்ல வந்தியா இல்லன்னா பைக்லயா? இந்த கேப் வேற வந்து தொலைய மாட்டேங்குது. ஃப்ளைட்க்கு வேற லேட் ஆகுது ச்சே!" என்று அவன் எரிச்சலோடு கேட்க, "ரெண்டுமே இல்லடா மச்சி, கேப்ல வந்தேன் ஹிஹிஹி..." என்று அசடுவழிந்தவாறு சொன்னான் யாத்ரன்.
அந்த பதிலே வரதனுக்கு எதையோ ஒன்றை உணர்த்த, சட்டென தோழனைப் பார்த்தவனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்துக்கொண்டன.
ஆனால் ஒருசில கணங்கள்தான்,
"இவன..." என்று பற்களைக் கடித்தவாறு அவன் மூக்கு விடைக்க முறைத்துத் தள்ள, தன் சிறிய சூட்கேஸோடு கருப்பு நிற ஜாக்கெட் கண்ணில் கூலிங் க்ளாஸ் என பயணத்திற்கு தயாராக நின்றிருந்தான் யாத்ரன்.
"நீ எங்கடா வர்ற?" என்று கோபமாக வரதன் கேட்க, "உன் ஊருக்குதான்" என்று சாதாரணமாக சொன்னவன், "இப்போ பேச நேரம் இல்ல, சீக்கிரம் வா ஆல்ரெடி வீ ஆர் லேட்" என்று இடது கையிலிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு பதற்றமாக அழைத்தான்.
மற்றவனுக்கு சனி உச்சத்தில் இருந்தது போலும்! எதையோ சொல்ல வந்தவன் பின் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுக்கொண்டான்.
'உன்ன ஃப்ளைட்ல ஏறினதும் கவனிச்சுக்குறேன்' என்று மெல்ல முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக வரதன் வெளியேற, "நானு.. நானு..." என்றுக்கொண்டே நண்பனின் பின்னாலேயே வால் போல் சென்றான் யாத்ரன்.
எப்படியோ இருவரும் விமானத்தில் ஏறிக்கொள்ள இந்தியாவுக்கு போய் சேரும் வரை நண்பனை முறைத்துக்கொண்டே வரதன் வந்தான் என்றால், தனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பது போல விமானத்திலிருந்த பெண்களிடம் கடலைப் போட்டவாறு வந்தான் மற்றவன்.
ஒருகட்டத்தில் பேசிப் பேசியே களைப்பில் யாத்ரன் உறங்கிவிட, மீண்டும் அந்த முகம் தெரியாத இளவரசியின் குரல் அவன் செவிகளுக்கு கேட்டது.
அந்த கனவையும் தாண்டி ஏதோ அவனின் பக்கத்தில் இருப்பது போல் அத்தனை நெருக்கதோடு அந்த குரல் கேட்க, "யாத்ரா வேக் அப்!" என்ற தோழனின் கத்தலில் பட்டென விழிகளைத் திறந்தான் அவன்.
இப்போதும் வேகமாக மூச்சு வாங்க, உடனே சுற்றிமுற்றி பதற்றமாகப் பார்த்தான்.
"என்னாச்சுடா டேய், நல்லாதானே இருந்த?" என்று வரதன் தோழனின் முகபாவனையில் சிறு பயத்தோடுக் கேட்க, "நத்.. நத்திங் வரதா, யாரோ பக்கத்துல இருந்த மாதிரி.." என்றான் அவன் திணறியபடி.
தோழனுக்கு அவன் சொல்ல வருவது புரியவில்லை.
அதை உணர்ந்தவன், "ட்ரீம்தான் போல ஊஃப்ப்..." என்று தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொள்ள, "ஏதோ சொல்ற! சீக்கிரம் உன் பேக் எடுத்துக்க, நாங்க வந்தாச்சு" என்று வரதன் சொன்னதும்தான் விமானம் தரையிறங்கியதே அவனுக்குத் தெரிந்தது.
நான்கு மணிநேர பயணம் அது.
"நொட் பேட்! அங்க இருக்குற டெம்பரேச்சர விட இது பெட்டர்தான்" என்றுக்கொண்டே யாத்ரன் இந்தியாவில் தன் முதல் காலடியை வைக்க, அதேநேரம் ருக்மணி பேசுவதைக் கூட உணராது எதையோ வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்த ஜான்சிக்கு என்னவென்று புரியாத ஒரு உணர்வு உள்ளுக்குள் ஊசலாடிக்கொண்டிருந்தது.
'என்ன இது, உள்ளுக்குள்ள ஒரு மாதிரியா இருக்கு. இப்படி நான் உணர்ந்ததே இல்லயே, ஒருமாதிரி புதுசா இருக்கு' என்று அவள் யோசித்துக்கொண்டிருக்க, தோழியை உலுக்கிய ருக்மணி, "என்னாச்சுடீ?" என்று கேட்டாள் புரியாமல்.
"இல்ல ருக்கு, ரெண்டு நாளா மனசே சரியில்ல. என்னன்னே புரிய மாட்டேங்குது. தூங்க முடியல, என்ன யோசிக்கிறேன்னு கூட தெரியல" என்று ஜான்சி உதட்டைப் பிதுக்கிக்கொண்டு சொல்ல, "ஓஹோ... எனக்கு புரிஞ்சு போச்சு. இது அதேதான். முதலிரவுல என்னதான் நடக்கும்னு நாம பேசிக்கிட்டோம்ல. அதோட விளைவுதான். கொஞ்சநாளா எனக்கு கூட தூக்கமே வர மாட்டேங்குது தெரியுமாடீ! நம்ம வயசு அப்படி..." என ஹஸ்கி குரலில் சொல்லிவிட்டு வெட்கப்பட்டாள் மற்றவள்.
ஆனால் ஜான்சிக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. இது ருக்மணி சொல்லும் உணர்வல்ல! பெயரறியாத இந்த உணர்வுக்கு பெயர் தேட முயற்சித்தாள் பெண்ணவள்.
சரியாக அவர்களுக்கு அருகே வந்தமர்ந்த கீதா, "யக்கோவ்! அந்த ஷானு பாவம்ல, இன்னும் ஒரு வாரத்துல அவளுக்கு பூஜை இருக்கு. நாம போய் அவ கூட இருக்கலாமேக்கா, எனக்கு மனசே கேக்க மாட்டேங்குது" என்று சிறு கவலை தோய்ந்த குரலில் சொல்ல, ஜான்சியின் முகமோ சட்டென இறுகியது.
ருக்மணியோ தோழியின் கரத்தைப் பற்றி அதில் அழுத்தம் கொடுக்க, திடீரென வாயில் வெத்தலையை சப்பிக்கொண்டு அங்கு வந்தார் சுபாஷ்.
"ஏய் எழுந்துருடீ! பொட்டபுள்ள வீட்டுல இருக்காம எப்போ பாரு இந்த மரத்தடியில வந்து ரெண்டு மூனு சில்வண்டுகளோட உக்கார்ந்துக்கிட்டு. போடீ போய் வீட்டு வேலைய பாரு!" என்று மகள் என்றும் பாராமல் வாய்க்கு வந்ததைப் பேசி அவள் முதுகில் ஓங்கி அடிக்க, உதட்டைப் பிதுக்கியவாறு ருக்மணியோடு வீட்டை நோக்கி ஓடினாள் ஜான்சி.
"உன் அப்பன் வெத்தலை பாக்கு வாயன உங்க அம்மா கல்யாணம் பண்ணதுக்கு அவங்க ஸ்டேட்லயே வேற ஒருத்தர கல்யாணம் பண்ணி நிம்மதியா இருந்திருக்கலாம். உன் அப்பனா போயிட்டாரு, இல்லன்னா வெத்தலையில விஷத்தை வச்சிருப்பேன்" என்ற தோழியின் கத்தலைக் கேட்டு புன்னகைத்தவள், "ஆமா.. இந்த உலகத்துக்கு ஒரு பாரம் குறைஞ்சிருக்கும்" என்றாள் விரக்தியாக.
ருக்மணியோ முறைத்துப் பார்க்க, "நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு, எனக்கு குழந்தை பெத்துக்குற பாக்கியம் இல்லன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. பொறக்கும் போதே வாங்கி வந்த சாபம் அது. இப்போதான் ஊருக்கு உபயோகப்படுற மாதிரி ஒன்னு பண்ண போறேன். அது நடந்தாச்சும் என் மூலமா ஏதாவது நல்லது நடக்கட்டும்" என்றவளின் வார்த்தைகளில் அத்தனை வலி அடங்கியிருந்தது.
அவள் பேசியதைக் கேட்ட ருக்மணியின் விழிகள் கலங்க தோழியை அழுகையோடு அணைத்துக்கொண்டாள்.
ஜான்சிக்கும் அவளிருந்த மனநிலைக்கு அப்போது அந்த இறுகிய அணைப்பு தேவைப்பட்டது போலும்!
விழிகளில் கசிந்த கண்ணீரோடு அவள் தோழியின் அணைப்பில் அமைதியாக நின்றிருக்க, இரண்டு ஆடவர்களையும் தனக்குள் சுமந்தபடி அந்த வெள்ளைநிற கார் ஊருக்குள் நுழைந்தது.
*********
கதை பிடிச்சிருக்கா ஃப்ரென்ட்ஸ்..
யாவும் நின் யாத்ரனாய்.. Episode 03 >>>
https://agnitamilnovels.blogspot.com/2026/02/03.ht ml
என்ட் என்னோட மூன்று ஆன்டி ஹீரோ கதைகளான
தஷுரி
ரதியின் ரணதீரன்
கனவுகள் கனலாய் மாறுமா
இந்த கதைகள Papr space Website appல April மாதம் வரைக்கும் ஃப்ரீயா படிக்கலாம்.. சோ மறக்காம ரீட் பண்ணிக்கோங்க..
Here's the link 👇
https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4

Comments
Post a Comment