விழிகள் 28



"ஏய் பாலா.. காலையிலயிருந்து பார்க்குறேன். நீயும் வீராவும் பரபரப்பா இருக்கீங்க. என்ன விஷயம்?" என்று அந்த ஊரிலுள்ள பெரியவரான பாண்டியன் கேட்க, அவர் பக்கத்திலுள்ள நான்கு அள்ள கைகளும் பாலாவை கேள்வியாக பார்த்துக்கொண்டிருந்தனர்.


"அதுவா... அந்த வெள்ளைக்கார துரையும் நம்ம யாழ்மொழியும் காதலிக்கிறாங்கல்ல! அவங்களுக்கு இன்னைக்கு கல்யாணம். அதான்.. இன்னும் நிறைய வேலை கெடக்கு. நாமதானே எல்லாத்தையும் பார்த்து பண்ணணும்" என்றுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் பாலா.


போகும் அவனை உறுத்து விழித்த பாண்டியனுக்கு இதை கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.


"என்ன கருமம் இது! நம்ம நாட்ட நாசமாக்கின அந்த வெள்ளைக்காரனுக்கு இவனுங்க உதவி பண்றானுங்களா, என்னால இதை ஜீரணிக்கவே முடியல" என்று அவர் கத்த, "ஆமா அண்ணே, அவங்களால அதிகமா வரிய கட்டி நாம இப்படி ஒரு நிலைமையில இருக்கோம். நம்மள அடிமைப்படுத்தி வற்புறுத்தி நம்ம உழைப்ப திருடினாங்க. ஆனா நடந்தது எல்லாத்தையும் மறந்து அவனுங்களோடயே உறவு கொண்டாடுறானுங்க" என்றார் பாண்டியனுக்கு பக்கத்திலிருந்த ராசு.


"அந்த வெள்ளைக்காரன நம்ம ஊர் புள்ள காதலிக்கிறது தெரிஞ்சதுமே அரசர் ஊரை விட்டு ஒதுக்கினதுக்கு பதிலா கொன்னு போட்டிருந்தா மனசுக்கு நிம்மதியா இருந்திருக்கும். ஒழுங்கக் கெட்ட நாய் த்தூ..." என்று இன்னொரு பெரியவர் தன் ஆதங்கத்தை கொட்ட, தீவிரமாக யோசித்தார் பாண்டியன்.


"இதை இப்படியே விட்டா நம்ம நாட்டுக்கு நாமளும் துரோகம் பண்ண மாதிரி ஆகிரும். என்கிட்ட ஒரு யோசனை இருக்கு. டேய் ராசு, அந்த வெள்ளைக்காரனுங்க அரண்மனை எங்கடா இருக்கு?" என்று அவர் கேட்க, முதலில் புரியாது விழித்த ராசுக்கு சில கணங்கள் கழித்துதான் மூளைக்கு உரைக்க, விஷமமாக இதழை வளைத்தார் அவர்.


அடுத்த சில மணித்தியாலங்களில் அந்த ஊரிலுள்ள பெரிய கோயிலில் சிறிய கூட்டம் கூடியிருக்க, ஐயரின் மந்திர வார்த்தைகள் மட்டுமே அந்த இடத்தை நிரப்பியிருந்தது.


லியோவோ மஞ்சள் கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிறை கையில் ஏந்தியிருந்தவன், தன்னவளின் விழிகளைப் பார்க்க, அவளின் விழிகளில் விழிநீர் நிரம்பியிருந்தது கிட்டத்தட்ட அழுகையின் விளிம்பில் நின்றிருந்தாள் யாழ்மொழி.


"தாலிய கட்டுங்க தம்பி.." என்று ஐயர் சொன்னதும் வைதேகி சொல்லிக் கொடுத்தது போல மூன்று முடிச்சுகளைப் போட்டவன் கொடுத்த குங்குமத்தையும் அவளுடைய நெற்றி வகுட்டில் வைத்தான்.


யாழ்மொழியின் விழிகளிலிருந்து ஏனென்றே தெரியாமல் விழிநீர் ஓடிக்கொண்டிருக்க, அதைத் துடைத்துவிட்டவன் அவளுடைய நெற்றியில் அனைவருக்கும் முன்னிலையில் அழுந்த முத்தமொன்றைப் பதித்தான்.


உடனே தன்னவனை நிமிர்ந்துப் பார்த்தவள் அவனின் மார்பில் முகத்தை புதைத்து கதறியழ, "இந்த நொடியில இருந்து நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவி, என்னைக்கும் ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்கணும். ரெண்டு பேரும் போய் பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க" என்றார் ஐயர்.


லியோவோ அதன் அர்த்தம் புரியாமல் விழிக்க, அவனின் கரத்தை பற்றி வைதேகியின் முன்னே அழைத்துச் சென்றவள் தான் மண்டியிட்டு அமர்ந்து தன்னவனை இழுக்க, அவள் சொல்வது போல் செய்தான் லியோ.


லியோ காலில் விழுந்ததுமே பதறிய வைதேகி உடனே, "ரெண்டு பேரும் என்னைக்கும் நல்லா இருக்கணும், மொதல்ல எழுந்திருங்க" என்று பதற்றமாக சொல்ல, சிரித்தவாறு அவர்களுக்கு அருகே வந்தான் வீரா.


"நீங்க உங்க தேசத்துக்கு போறதுக்கான எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டேன்.  விடியற்காலையில ஒரு கப்பல் புறப்பட இருக்கு. எங்க ஆளுங்கள்ல ஒருத்தன் அங்க வேலை பார்க்குறான். யாருக்கும் தெரியாம இன்னைக்கு ராத்திரியே நீங்க கப்பல்ல ஏறிடுங்க. உங்க தேசத்துக்கு போய் சேருற வரைக்கும் ரொம்ப ஜாக்கிரதை!" 


என்று வீரா எச்சரிக்கும் குரலில் சொல்ல, யாழ்மொழியின் முகம்தான் வாடிப் போனது.


"எனக்கென்று இருந்த ஒரே உறவு இளவரசிதான். இன்று அவர்கள் என் பக்கத்தில் இருக்க வேண்டுமென்று எண்ணினேன். ஆனால்..." என்று வேதனையோடு பேசிய யாழ்மொழி விழியோரம் கசிந்த கண்ணீரைத் துடைத்துக்கொள்ள, லியோவோ ஆறுதலாக அவள் கையைப் பற்றியிருந்த தன் கரத்தில் அழுத்தத்தைக் கூட்டினான்.


"எனக்கு புரியுது யாழ், ஆனா.. அரசருக்கு இந்திரா என்னை காதலிக்கிறது தெரிஞ்சப்போவே அவளுக்கான பாதுகாப்ப ரொம்ப பலப்படுத்திட்டாரு. இப்போ உன்னை அரண்மனையை விட்டு வெளிய அனுப்பினதுலயிருந்து இந்திராவ ரொம்ப கண்காணிக்க ஆரம்பிச்சிருக்காரு. அவளால எதுவுமே பண்ண முடியல. உன் கல்யாணத்தை பத்தி அவளுக்கு நான் அனுப்பின செய்தி அவள போய் சேர்ந்திருக்குமான்னே எனக்கு சந்தேகமா இருக்கு" 


என்ற சொல்லி முடித்து வீரா ஒரு ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட, "என்ன இங்க மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க. அங்க உங்களுக்கான விருந்து தயாரா இருக்கு. சீக்கிரம் வாங்க.." என்று அழைத்துச் சென்றார் வைதேகி.


"ஏதோ எங்களால முடிஞ்சது" என்று வைதேகி கைகளைப் பிசைந்தவாறு தயக்கமாக சொல்ல, "தாங்கள் எதைக் கொடுத்தாலும் எங்களுக்கு அது பெரும் அமிர்தம்தான் அம்மா" என்று யாழ்மொழி சொல்லிக்கொண்டிருக்கும் போதே பதறிக்கொண்டு வந்தார் மேகலை.


"ஏய் வைதேகி, அரசர் வந்திருக்காரு. உன் குடிசைய நோக்கிதான் வர்றாரு. சீக்கிரம் ஏதாச்சும் பண்ணு" என்று அவர் பதட்டமாகச் சொல்ல, "அய்யோ கடவுளே! இப்போது நான் என்ன செய்வேன்" என்று பதற ஆரம்பித்துவிட்டாள் யாழ்மொழி.


"எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்குறேன்" என்று லியோ சட்டைக் கையை மடித்து விட்டவாறு சொல்ல, வேகமாக யோசித்த வீரா, "இப்போ வெளியில போக முடியாது சீக்கிரம் போய் அந்த இடத்துக்குள்ள ஒளிஞ்சுக்கோங்க.. சீக்கிரம்..." என்றான் வேகமாக.


"இல்ல அது..." என்று லியோ அப்போதும் நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு ஏதோ சொல்ல போக, அவன் கரத்தைப் பற்றி நாலுபுறமும் ஓலைகளால் குடிசைக்குள் அமைக்கப்பட்டிருந்த சிறிய சமையலறைக்குள் இழுத்துக்கொண்டே சென்றாள் அவள்.


அவர்கள் ஒளிந்துக் கொள்ளவும் அரசர் குடிசைக்குள் தன் காவலாளிகளோடு நுழையவும் நேரம் சரியாக இருந்தது.


"வணக்கம் அரசே" என்று வீரா மரியாதை நிமித்தமாக தலை வணங்க, வைதேகியோ இதயம் படபடக்க கைகளைப் பிசைந்தவாறு மகனின் அருகே நின்றிருந்தார்.


"உன்னுடன் முக்கியமான விடயம் பற்றி கலந்துரையாடவே நான் இங்கு வந்தேன். தேவையில்லாத பேச்சுக்கள் வேண்டாம். என் மகளை உண்மையாகத்தான் காதலிக்கிறாயா?" 


என்று வேந்தன் கூரிய பார்வையோடுக் கேட்க, ஒருகணம் அவரை அதிர்ந்துப் பார்த்தவன், "ம்ம்.. இந்திராவ நான் ரொம்ப காதலிக்கிறேன்" என்றான் அழுத்தமான பார்வையோடு.


"பெண்ணிற்காகவா.. பொன்னிற்காகவா?" என்று அவர் தன் அடுத்த சந்தேகத்தைக் கேட்க, தன் காதலை சந்தேகிக்கும் அவர் மீது வீராவுக்கு கோபம் உச்சத்தை தொட்டாலும் அதை முயன்று அடக்கிக்கொண்டு, "சொத்துக்காக தான் நான் காதலிச்சேன்னா இந்நேரம் இந்த குடிசையில நான் இருந்திருக்க மாட்டேன்" என்றான் அடக்கப்பட்ட கோபத்தோடு.


அவனின் வார்த்தைகளில் இருந்த உஷ்ணம் அவருக்கு புரிய பதிலுக்கு கோபப்படாமல் மெல்லிய புன்னகை சிந்தியவர், "ஒருவேளை என் மகள் தவறான ஒருவனை வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்திருந்தால் என் எதிர்வினையும் இப்படி இருந்திருக்காது" என்று சொல்ல, "புரியல அரசே..." என்ற வீராவின் புருவங்கள் கேள்வியாக முடிச்சிட்டன.


அவரின் வார்த்தைகளுக்கான அர்த்தம் அவனுக்கு சுத்தமாக புரியவில்லை.


"இந்திராவிடம் நீ ஆட்சியை முழுதாக பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொன்னது உன்னை பரீட்சிக்கதான். நீ பொன்னிற்கு ஆசைப்படுபவனாக இருந்திருந்தால் நான் கேட்டதும் நீ மறுத்திருக்க மாட்டாய். ஆனால் சுயமரியாதைக்காக நீ ஏற்க மறுத்த உன் குணம் என்னை வியக்க வைத்தது வீரா" என்று வேந்தன் மெச்சுதலாக சொல்ல, வைதேகிக்கு தன் மகனை நினைத்து அத்தனை பெருமையாக இருந்தது.


"கூடிய விரைவில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கலாம்" என்று அவர் சொல்லிவிட்டு வெளியேறப் போக, "அரசே ஒரேயொரு நிபந்தனை" என்று குறுக்கிட்டு சொன்னான் அவன்.


"வாய மூடு, என்ன காரியம் பண்ற?" என்று வைதேகி மகனை அதட்ட, "என்னை பத்தி உங்க மனசுல இருக்குற அபிப்பிராயத்துக்கு ரொம்ப நன்றி. ஆனா.. இந்திராவை நான் திருமணம் செஞ்சாலும் நான் நானாதான் இருப்பேன். அதுல என்னைக்கும் மாற்றம் இருக்காது" என்று வீராவோ வேந்தனின் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தவாறு சொன்னான்.


சில கணங்கள் அவனை வெறித்துப் பார்த்தவர் ஒரு மெல்லிய புன்னகையுடனான தலையசைப்போடு அங்கிருந்து சென்றிருக்க, வீராவுக்கு மனதிலுள்ள பெரிய ஒரு பாரமே இறங்கிய உணர்வு.


இதற்கிடையில், ஒளிந்திருந்த யாழ்மொழிக்கு பயத்தில் தன் இதயம் துடிக்கும் சத்தம் தன் காதிற்கே கேட்கும் உணர்வு.


"கடவுளே! இப்போது நான் என்ன செய்வேன், அரசர் மட்டும் என்னை பார்த்துவிட்டால் என் மீதிருக்கும் கோபத்தில் மொத்த கிராமத்தையும் அல்லவா கொளுத்து விடுவார்! எனக்கு ஏன்தான் இத்தனை சோதனையோ?" 


என்று அவள் புலம்பிக்கொண்டிருக்க, கிட்டத்தட்ட நூலிடைவெளியில் அவளோடு நெருங்கி நின்றிருந்த லியோவோ தன்னவளையே  இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.


நெற்றியில் குங்குமம், கழுத்தில் மஞ்சள் தாலியோடு உதடுகள் துடிக்க நின்றிருந்த தன் மனைவியிடமிருந்து அவனால் விழிகளை அகற்றவே முடியவில்லை.


"யாழ்.." என்று அழைத்தவனின் குரல் காற்றுக்கே வலிக்காதது போல் வெளிவர, உடனே அவனை நிமிர்ந்துப் பார்த்தவளோ கேள்வியாக இரு புருவங்களை ஏற்றி இறக்கினாள்.


அதில் மொத்தமாக விழுந்தவன், "உன் நெத்தியில நான் வச்சுவிட்ட இந்த குங்குமத்துக்கும் உன் கழுத்துல நான் போட்டு விட்ட இந்த மஞ்ச கயிறுக்கும் எனக்கு சத்தியமா அர்த்தம் தெரியல. ஆனா ஒன்னு மட்டும் என்னால ஃபீல் பண்ண முடியுது. நீ என்னோட யாழ். நீ எனக்கு சொந்தமாகிட்ட" என்று ஹஸ்கி குரலில் விழிகளில் காதலைத் தேக்கிக்கொண்டு சொல்ல, அந்த வார்த்தைகளில் பெண்ணவளின் முகமோ குப்பென்று சிவந்தது.


இருந்தும் அதை மறைக்க முயன்றவாறு, "அப்படியா.. ஆனால் தங்களின் மீதுள்ள கோபம் எனக்கு குறையவில்லை. என்னையே யாரென தெரியாதென்று சொல்லி என்னை எப்படியெல்லாம் தவிக்க விட்டீர்கள். இதற்கெல்லாம் சேர்த்து தங்களுக்கு தண்டனை உண்டு" என்று போலி கோபத்தோடு சொல்ல, அவளை கொடுப்புக்குள் சிரித்தவாறு பார்த்தான் அவன்.


"ஆஹான்! எனக்கு இப்படி கூட தண்டனை கொடுத்துக்கலாம்" என்று லியோ பொடி வைத்து பேச, அதை அறியாமல் "எப்படி?" என்று வெகுளியாய் அவள் கேட்க, அடுத்தகணம் அவளிதழை கவ்விக்கொண்டான் ஆடவன்.


யாழ்மொழியோ தெறித்து  விடுமளவிற்கு விழி விரிக்க, மெல்ல அவளிதழை சுவைத்துவிட்டு மெல்ல விலகியவன், "இப்படிதான், உனக்கு எப்போ எல்லா கோபம் வருதோ அப்போ எல்லா இப்படி தண்டனை கொடுத்துக்கலாம்" என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னான்.


அவனை முறைக்க முயன்று முடியாமல் அவள் கீழுதட்டைக் கடித்த வண்ணம் தலை குனிந்துக்கொள்ள, "ஹ்ர்ம் ஹ்ர்ம்.. அரசர் போய் அரை மணித்தியாலம் ஆகிருச்சு. சாப்பிட வருவீங்களா இல்லன்னா..." என்று வெளியிலிருந்து கேலியாக குரல் எழுப்பினான் வீரா.


அவனின் கேலியில் இருவருக்குமே வெட்கமாக போய்விட, மறைந்திருந்த இடத்திலிருந்து வெளியில் வந்தவர்களுக்கு தடல்புடலாக ஏற்பாடு செய்திருந்த விருந்து காத்திருந்தது.


வயிறார உண்டு முடித்துவிட்டு சிரித்து பேசிக்கொண்டிருந்தவர்களின் குடிசைக்குள் நுழைந்த பாலாவின் முகம் பயத்தில் வெளுத்துப் போயிருந்தது.


அதைக் கவனித்த வீரா, "என்னாச்சு பாலா, ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று புரியாமல் கேட்க, "அந்த வெள்ளைக்காரனுங்க இங்கதான் வரானுங்க. இவங்க இங்க இருக்குற விஷயத்த பாண்டியன் ஐயா அவனுங்ககிட்ட காட்டி கொடுத்துட்டாருடா வீரா" என்று சொல்லி முடிக்க, அங்கிருந்த மொத்த பேரும் விக்கித்துப் போய்விட்டனர்.


"என்னப்பா சொல்லுற?" என்று வைதேகி நெஞ்சில் கை வைத்துக்கொள்ள, "ச்சே! அவங்க எல்லா மனுஷங்கதானா" என்ற வீராவுக்கு கோபம் உச்சகட்டத்தில் எகிறியிருக்க, ஆனால் அடுத்து என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை.


"இப்போ என்ன பண்றது?" என்று அவன் கேட்க, தீவிரமாக யோசித்தான் லியோ.


"ஒரு வழி இருக்கு. வீரா நீங்க யாழ கூட்டிக்கிட்டு இங்கயிருந்து போங்க. அவங்க கையில யாழ் மாட்டிக்க கூடாது. முக்கியமா அந்த ரொனேல்ட் கிட்ட. அவங்ககிட்ட நானே போய் சரண்டராகி அவங்கள நான் திசை திருப்புறேன். சீக்கிரம் பாதுகாப்பான இடத்துக்கு போங்க" 


என்று அவன் சொல்லிவிட்டு வெளியேற எத்தனிக்க, அவன் கரத்தைப் பற்றிக்கொண்ட  யாழ்மொழி தன்னவனை இறுக அணைத்து அழ ஆரம்பித்தாள்.


"இல்லை.. தங்கள் என்னை விட்டு போங்க கூடாது. தாங்கள் இல்லாமல் நா.. நான் என்ன செய்வேன். என்னால் முடியாது. முடியவே முடியாது" என்று அவள் பிடிவாதமாக நிற்க, ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்ட லியோவிற்கு தன்னவளின் அழுகையை மட்டும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.


அவளின் இரு கன்னங்களை தாங்கிக்கொண்டவன், "யாழ், எனக்கு உன்னை விட்டு போகணும்னு ஆசையில்ல. ஆனா ஐ ஹேவ் நோ சாய்ஸ். இதை நான் பண்ணிதான் ஆகனும். நான் உனக்கு சத்தியம் பண்றேன். கண்டிப்பா நான் உன்னை தேடி வருவேன்" என்று உறுதியான குரலில் சொல்லி அவள் நெற்றியில் அழுந்த முத்தம் பதித்தான்.


"வீரா, நான் வர தாமதமாகலாம். ஆனா நம்ம திட்டத்துல எதுவும் தவற கூடாது. நேரத்துக்கு யாழ் அந்த கப்பல்ல இருக்கனும். இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்கு ஆபத்துதான்" 


என்ற லியோ மீண்டும் தன்னவளின் இதழில் அழுந்த முத்தத்தைப் பதித்துவிட்டு அங்கிருந்து வெளியேற, தன் கையை விட்டு செல்லும் அவனின் கரத்தை அழுகையோடு பார்த்திருந்தவளின் மற்ற கரத்தைப் பற்றினான் வீரா.


"யாழ் நமக்கு நேரமில்ல, சீக்கிரம்" என்று அவன் அவளை இழுத்துக்கொண்டு பின் வழியாக ஓட, சரியாக ஆங்கிலேய அதிகாரிகளோ கிராமத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர்.


லியோவோ சட்டைக் கையை மடித்துவிட்டவாறு அவர்களின் எதிரே சென்று நிற்க, உடனே அதிகாரிகளோ கையில் துப்பாக்கியோடு அவனை சுற்றி வளைத்தனர்.


ஆனால், லியோவின் முகத்தில் பயத்திற்கான சாயல் கொஞ்சமும் தெரியவில்லை. 


காரிலிருந்து இறங்கிய ரொனேல்டிற்கு அவனைப் பார்க்கப் பார்க்க கொலைவெறி அதிகரிக்க, வேகமாக சென்று லியோவின் நெற்றிப் பொட்டை நோக்கி துப்பாக்கியை குறி வைத்தார் அவர்.


************



Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚