விழிகள் 27

 



வில்லியம் லியோவை நோக்கி குறி வைத்து சுடப் போக, பற்களைக் கடித்தவன் தன் எதிராளி எதிர்பார்க்காத கணத்தில் மின்னல் வேகத்தில் செயற்பட்டு துப்பாக்கியை அவன் கரத்திலிருந்து தட்டிவிட்டான்.


வில்லியமோ அதிர்ந்துப் போய் அதை எடுக்கப் போக, உடனே சுதாகரித்து கையிலெடுத்த லியோ அவனின் நெற்றிப் பொட்டை நோக்கி குறி வைத்திருக்க, அந்த நொடியே சடலமாக தரையில் விழுந்தான்  வில்லியம்.


இறந்துக் கிடந்தவனின் உடலை லியோ  வெறித்துப் பார்த்திருக்க, மற்ற இருவருக்கும் ஒருசில கணங்களில் நடந்ததை நம்பவே முடியவில்லை.


ரொனேல்டிற்கு இதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. 


"இதோட விளைவு என்னன்னு தெரிஞ்சும் எங்களுக்கு எதிரா இப்படி பண்ணியிருக்க. இதுக்கப்பறம் நீயே கெஞ்சினாலும் ப்ரிட்டிஷ் அரசாங்கத்துல உனக்கு இடம் இல்ல. அதுமட்டுமில்ல, ஒரு ப்ரிட்டிஷ் ஆஃபீசர கொன்னதுக்காக உன்ன கொல்ல சொல்லி ஆர்டர் போட போறேன். அப்போதான்டா நான் யாருன்னு.." 


என்று பேசிக்கொண்டே சென்றவரின் வார்த்தைகள் லியோ அவரை நோக்கி துப்பாக்கியை குறி வைக்கவும் அடங்கிப் போக, எச்சிலை விழுங்கியபடி இரண்டடி பின்னே நகர்ந்தார்.


"நோ  லியோ... நீ இப்படி பண்ண கூடாது" என்று ரொனெல்ட் ஒவ்வொரு வார்த்தைகளாக கோர்த்து பயந்தபடி சொல்ல, ஏளனமாகப் புன்னகைத்தவன் துப்பாக்கியை சுழற்றி அதன் கைப்பிடியியால் ஓங்கி அவர் தலையில் அடித்தான்.


ரொனேல்ட்டோ அந்த இடத்திலேயே மயங்கி சரிய, "நாம இங்கயிருந்து போகணும் ஐயா, உங்களுக்கு ஆட்சேபணை இல்லன்னா நீங்களும் யாழும் எங்க இடத்துக்கு வந்திருக்கலாம். அங்க உங்களுக்கு பாதுகாப்பா இருக்கும்" என்றான் வீரா சிறு தயக்கத்தோடு.


சில கணங்கள் யோசித்தவன், "ம்ம்..." என்றவாறு யாழ்மொழியின் அருகே செல்ல, அவளோ தரையில் சுயநினைவின்றி கிடக்க, "சாரி யாழ்" என்று அவளையே பார்த்தவாறு சொன்னவனின் குரல் கரகரத்தது.


"மத்த அதிகாரிங்க வரதுக்கு முன்னாடி நாம இங்கயிருந்து போகணும்" என்று வீரா துரிதப்படுத்த, விழிகளை அழுந்த மூடித் திறந்தவன் உடனே தன்னவளை கைகளில் ஏந்திக்கொண்டு வேகமாக முன்னே நடக்க, கோழிக் குஞ்சைப் போல் அவனுடைய கைகளுக்குள் சுருண்டுப் படுத்திருந்தாள் பெண்ணவள்.


ஒருசில மணித்தியாலங்களின் பின், 


"என்ன வீரா இது, யாருக்கு போய் அடைக்கலம் கொடுக்க சொல்ற. இது அரசருக்கு தெரிஞ்சா இவள ஒதுக்கின மாதிரி நம்மளயும் ஊரை விட்டே ஒதுக்கிருவாரு. என்னால இதை பண்ண முடியாது. அவள கூட்டிட்டு அவன போக சொல்லு" என்று வைதேகி வீராவிடம் கத்திக்கொண்டிருக்க, தன் குடிசையை பார்த்துவிட்டு தாயை முறைத்துப் பார்த்தவன், "அவருக்கு நல்லாவே தமிழ் தெரியும், கொஞ்சம் அமைதியா பேசு" என்றான் பற்களைக் கடித்தபடி.


வைதேகியோ மகனை எரிச்சலாக ஒரு பார்வைப் பார்த்தவர், "உனக்கு நான் சொல்றது புரியுதா இல்லையா வீரா, நீ இவங்கள அழைச்சுட்டு வந்தத எல்லாரும் பார்த்துட்டாங்க, கண்டிப்பா யாராலயும் இதை ஏத்துக்க முடியாது. இந்த வெள்ளைகாரனுங்களால நாம அனுபவிச்ச கொடுமைய நீ மறந்துட்டியா என்ன! எனக்கு பயமா இருக்கு" என்று இறுதியில் அழுகையோடு முடிக்க, விழிகளை சலிப்பாக உருட்டினான் அவன்.


"அம்மா கொஞ்சம் புரிஞ்சுக்கோ! அந்த பொண்ணுக்கு இப்போ யாருமே இல்ல, அவளுக்காக சண்டை போட்டு இப்போ அவருக்கு எதிரா எல்லா அதிகாரிகளும் இருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறாங்கம்மா. எனக்கு புரியுது, இதை நம்ம யாராலயும் ஏத்துக்க முடியாதுன்னு. ஆனா... நாம இதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும். பாவம்மா, அதுமட்டுமில்லாம இந்திராவுக்கு யாழ் ரொம்ப ரொம்ப முக்கியம். அவங்களுக்காக இல்லன்னாலும் இந்திராவுக்காக நான் அவங்களுக்கு எதுவும் ஆக விட மாட்டேன்" 


என்று அழுத்தமாக அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, வேகமாக ஓடி வந்தான் பாலா.


"வீரா, ஊர் முழுக்க அந்த வெள்ளைக்கார துரையோட கொலைய பத்திதான் பரபரப்பா பேசுறாங்க. இவங்க இங்கேயே இருக்குறதான் இப்போ பாதுகாப்பு. ஆமா.. அவர் உள்ளதான் இருக்காரா?" என்று ஆர்வமாக அவன் கேட்க, "ம்ம்" என்று தலையசைத்தான் வீரா.


"ஒன்னும் பிரச்சனை இல்ல, நம்ம ஆளுங்க எல்லாம் நமக்கு சாதகமாதான் இருக்காங்க. நம்மகிட்ட உதவிக்காக வந்திருக்காங்க, பழைய பகைய வச்சு விரட்டியா அடிக்க முடியும். அவங்க இங்கயிருந்து போற வரைக்கும் நம்மளால முடிஞ்ச உதவிய பண்ணலாம்" என்று பாலா தீவிர முகபாவனையோடு சொல்ல, தன் அம்மாவை ஒரு பார்வைப் பார்த்தான் மற்றவன்.


வைதேகியோ சங்கடத்தோடு தலை குனிந்துக்கொள்ள, அவரைத் தேடி வந்த அவரின் குடிசையிலிருந்து இரண்டு குடிசைகள் தள்ளியிருக்கும் மேகலை கஞ்சி நிரப்பப்பட்டிருந்த சட்டியை அவர் கையில் திணித்து, "யக்கோவ், இதை கொண்டு போய் அந்த துரைகிட்ட கொடுங்க. ரொம்ப நேரமா அந்த பொண்ணையே பார்த்துக்கிட்டு உக்கார்ந்திருக்கு. பாவம் பசிக்கும்ல" என்றார் வெகுளியாக.


"பார்த்தீங்களாம்மா, இதுதான் நம்ம பண்பாடு. எதிரியா இருந்தாலும் தாகத்துக்கு தண்ணி கொடுக்கணும்" என்று வீரா உரைப்பது போல் சொல்ல, சங்கடத்தை விட்டு கஞ்சிக் கோப்பையை வாங்கிக்கொண்டவர் லியோ இருந்த குடிசைக்குள் நுழைந்தார்.


அவனோ யாழ்மொழியோடு இங்கு வந்ததிலிருந்து ஒருநொடி கூட கண்ணயரவில்லை. 


அவளையே இமை மூடாமல் பார்த்த வண்ணம் அப்படியே அமர்ந்திருக்க, சிறு பயமும் தயக்கத்தோடும் உள்ளே நுழைந்தவர், "ஹ்ர்ம் ஹ்ர்ம்.. ஐயா.." என்று குரல் கொடுக்க, உடனே நிமிர்ந்துப் பார்த்தான் அவன்.


விழிகளை சுருக்கி அவன் சாதாரணமாக பார்ப்பதே அவருக்கு பயங்கரமாக இருக்க, "அது.. அது வந்து துரை ஐயா, ரொம்ப நேரமா சாப்பிடாம இருக்கீங்க. கஞ்சி இருக்கு, சாப்பிடுறீங்களா?" என்று கஷ்டப்பட்டு வார்த்தைகளைக் கோர்த்து திக்கித்திணறிக் கேட்டார் வைதேகி.


"கொடுங்க" என்று அவன் சொன்னதுமே அவருக்கு அத்தனை சந்தோஷமாக இருக்க, உடனே சிறிய கோப்பையில் கஞ்சை ஊற்றி அவனிடம் நீட்டினார் பெரியவர்.


அதை வாங்கி ஒரு கரண்டி சாப்பிட்ட லியோவின் மனக்கண் முன் கடந்த காலத்தில் அவன் நடந்துக்கொண்ட விதமும் சில சம்பவங்களும் ஞாபகத்திற்கு வர, தொண்டைக்குழியில் உணவு இறங்கவே மறுத்தது.


ஆரம்பத்தில் யாரை துன்புறுத்த எண்ணினானோ இன்று அவர்கள்தான் அவனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள்.


அதை நினைத்துப் பார்த்தவன் கைகளைப் பிசைந்தவாறு நின்றிருந்த வைதேகியை நிமிர்ந்துப் பார்த்து, "தேங்க் யூ" என்று சொல்ல, "என்ன ஐயா?" என்று அதற்கான அர்த்தம் புரியாமல் கேட்டார் அவர்.


"அது.. ரொம்ப நன்றி" என்று லியோ மீண்டும் சொன்னதும் வைதேகிக்கு ஆச்சரியம் தாளவில்லை. 


ஆச்சரியம் அதிர்ச்சி கலக்க குடிசையிலிருந்து வெளியே வந்தவர், "அந்த வெள்ளைக்கார துரை நன்றி சொன்னாரு மேகல" என்று துள்ளிக்குதிக்காத குறையாக சொல்ல, அதைப் பார்த்துக்கொண்டிருந்த வீராவின் இதழ்களும் புன்னகையில் விரிந்தன.


இங்கு லியோவோ கஞ்சியை சாப்பிட்டுக்கொண்டிருக்க, சரியாக உணர்வுக்கு வந்து மெல்ல விழிகளைத் திறந்தாள் யாழ்மொழி.


தன்னவள் விழித்ததை பார்த்ததும் உணவை ஓரமாக வைத்தவன், "யாழ்..." என்றழைத்தவாறு அவளை நெருங்க, தலையை தாங்கியவாறு எழுந்தமர்ந்த பெண்ணவளோ தன்னை நெருங்கியவனை அதிர்ந்துப் பார்த்துவிட்டு விழிகளை சுழல விட்டு சுற்றி முற்றிப் பார்த்தாள்.


"யாழ், நவ் யூ ஆர் சேஃப்.. ஐ மீன் நீ இப்போ பாதுகாப்பா இருக்க" என்று சொல்லிக்கொண்டே லியோ தன்னவளின் கரத்தைப் பற்றிக்கொள்ள, பட்டென்று அதை உதறிவிட்டவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.


"என்னை தொடாதீர்கள், அதுதான் என்னை தெரியவில்லை என்று சொல்லி என்னை நிர்க்கதியாக நிற்க வைத்தீர்களே, இப்போது மட்டும் என்ன?" என்று யாழ் படபடவென பொரிந்துத் தள்ள, "ஆமா சொன்னேன்தான், என்னை மன்னிச்சிரு! அதுக்காக உன்ன நான் அப்படியே விடல யாழ், உனக்காகதான் வந்தேன்" என்றான் லியோ வேகமாக.


"இது என்ன என் மேல் புது அக்கறை, அன்று முத்தம் கொடுத்துவிட்டு காதலே இல்லையென்று சொன்னீர்கள் பின் என்னை தவிக்க விட்டு தங்களின் தேசத்திற்கு சென்றீர்கள். இப்போது தங்களுக்காக அனைத்தையும் உதறிவிட்டு வந்த என்னை யாரென்றே தெரியவில்லை என்றீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக என்னை கொல்வதற்கு தங்களின் துப்பாக்கியால் என்னை மொத்தமாக கொன்றுவிடுங்கள். தங்களின் நினைவுகளோடு நான் நிம்மதியாக இறந்துவிடுவேன். இந்த வேதனை வேண்டாம்" 


என்று விழிநீரோட அவள் பேசிக்கொண்டே போக, லியோவுக்கு தன்னவளின் வேதனையும் வலியும் புரியாமல் இல்லை.


அவளை மனதளவில் அத்தனை காயப்படுத்தி இருக்கிறான். தன் செயலை எண்ணி அவனுக்கே மனம் குற்றவுணர்ச்சியில் தவிக்க, ஒருவித தயக்கத்தோடு தன்னவளை நெருங்கினான் அவன்.


"என் பக்கத்தில் வராதீர்கள்! சொல்வது புரிகிறதா இல்லையா.. தமிழையும் தாண்டி தங்களின் மொழியில் வேறு சொல்ல வேண்டுமோ" என்று அவள் கோபம் தெறிக்கப் பேச, அவள் முழங்கையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்து அவளிடையை வளைத்து தன்னோடு நெருக்கிக்கொண்டான் லியோ.


"அதான் நானும் உன் மொழியிலயே மன்னிப்பு கேட்டேனே, என் மொழியில வேற மன்னிப்பு கேக்கனுமா! அப்போதான் அம்மணி என்னை மன்னிப்பீங்களோ..." என்று அவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்க, அவனின் பிடியிலிருந்து விடுபட முயன்றவாறு மூக்கு விடைக்க முறைத்துப் பார்த்தாள் யாழ்மொழி.


"நான் தங்களை மன்னிக்கவே போறதில்லை" என்று அவள் பற்களை கடித்தவாறு சொல்ல, "அதையும் பார்க்கலாம், நீ மன்னிக்கலன்னாலும் பரவாயில்ல, நவ் யூ ஹேவ் நோ சாய்ஸ், என் கூடதான் உன்னோட மீதி வாழ்க்கைய கழிச்சாகனும்" என்றான் லியோ கொடுப்புக்குள் சிரித்தவாறு.


ஒரு பக்கம் அவன் மீது கோபம் இருந்தாலும் இன்னொரு புறம் அவனின் பார்வையிலும் வார்த்தைகளிலும் அவளுக்கு வெட்கம் பீறிட்டது.


"எதுவும் தேவையில்லை" என்று அவள் முகத்தை திருப்பிக்கொள்ள, லியோ தன்னவளின் கன்னத்தில் அழுந்த முத்தத்தைப் பதிக்கவும் வீரா உள்ளே நுழையவதற்கும் நேரம் சரியாக இருந்தது.


அதைப் பார்த்தவன், "அய்யய்யோ..." என்று அலறியவாறு குடிசையிலிருந்து வேகமாக வெளியேற, லியோவின் மார்பில் கை வைத்துத் தள்ளிவிட்டு பதறியபடி விலகியமர்ந்தாள் யாழ்.


"என் மானமே போய்விட்டது. இதற்குப் பிறகு எப்படி அவர் முகத்தை பார்ப்பேன்" என்று அவள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக அவனை பார்த்து கேட்க, "கண்ணாலதான்..." அலட்சியமாக பதில் சொன்னவாறு எழுந்து நின்றவன், "வீரா..." என்றழைத்தான் சத்தமாக.


"ஹ்ர்ம் ஹ்ர்ம்.." என்று குரலை செருமியவாறு சிறு சங்கடத்தோடு உள்ளே வந்தவன், "அது... அது வந்து... இதுக்கப்பறம் என்ன பண்ணலாம்னு யோசிச்சிருக்கீங்க?" என்று தயங்கித் தயங்கிக் கேட்க, லியோவிடமோ அதற்கு பதிலே இல்லை.


"தெரியாது, ஆனா... இங்க இருக்குறத விட யாழ கூட்டிட்டு என்னோட தேசத்துக்கு நான் போறது நல்லது. அங்க எனக்கு உதவி பண்ண நிறைய பேர் இருக்காங்க. இங்க இருந்து எங்க நாட்டுக்கு அனுப்புற பொட்கள் அடங்கிய கப்பல்ல எப்படியாச்சும் நாங்களும் ஏறிக்கணும். இதை விட்டா வேற வழி தெரியல" என்று அவன் தன் திட்டத்தை சொல்ல, யாழ் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.


"என் நாட்டை விட்டு செல்வதா...' என்று அதிர்ந்துப் போய் அவள் தன்னவனைப் பார்க்க, வீராவுக்குமே லியோவின் இந்த முடிவில் அதிர்ச்சிதான்.


"உங்க முடிவு ஐயா. நீங்க பாதுகாப்பா உங்க தேசத்துக்கு போறதுக்கான ஏற்பாட நாங்க பண்றோம்" என்று வீரா சிறு நம்பிக்கையோடு சொல்ல, திடீரென உள்ளே நுழைந்தார் வைதேகி.


"ஐயா நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே" என்று அவர் தயக்கத்தோடுக் கேட்க, "கேளுங்க.." என்றான் அவன் புருவ முடிச்சுகளோடு.


அவனின் கழுகுப் பார்வை அவரின் வயிற்றுக்குள் பயபந்தை உருளச் செய்தாலும் முயன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "நீங்க நிஜமாவே இந்த பொண்ண ரொம்ப காதலிக்கிறீங்களா?" என்று கேட்க, ஒருகணம் அவரை புரியாமல் பார்த்தவன் பின் யாழ்மொழியைப் பார்த்தவாறு, "ம்ம்.. ஐ லவ் ஹெர்" என்றான் சிறு புன்னகையோடு.


அவருக்கு அவன் சொன்னதன் அர்த்தம் புரியாவிட்டாலும் அவனின் விழிகளே அவன் காதலை அப்பட்டமாக உணர்த்த, "அப்போ... அப்போ நீங்க யாழ்மொழிய கல்யாணம் பண்ணிட்டு உங்க மனைவியா அவள இங்கயிருந்து அழைச்சுட்டு போங்க" என்று சொல்ல, மற்ற மூவருமே இதை எதிர்பார்க்கவில்லை.


"அம்மா என்ன பேசுற நீ..." என்று வீரா அதிர்ச்சியோடு சொல்ல, லியோவும் யாழ்மொழியும் உடனே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.


"நான் என்னடா தப்பா சொன்னேன், எங்க கலாச்சாரம் இதுதான். நீங்க தாராளமா அந்த பொண்ண அழைச்சுட்டு போகலாம், ஆனா உங்க மனைவியாதான் அவ உங்க கூட வரனும். எங்க ஊர் பொண்ணு மேல இதுக்கும் மேல கலங்கம் வரக் கூடாது. நா.. நான் ஏதாவது தப்பா சொன்னேனா?" என்று அவர் தலை குனிந்தவாறுக் கேட்க, லியோவோ கொஞ்சமும் யோசிக்கவில்லை.


"எனக்கு இதுல சம்மதம்" என்று அவன் சொல்லிவிட, யாழ்மொழிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.


இப்போது வைதேகியின் பார்வை அவளின் மீது படிய, யாழ்மொழியின் விழிகளிலிருந்து கண்ணீர் மட்டும் அருவியாய் ஓடியது.


"யாழுக்கு இதுல விருப்பம் இல்ல போல, கல்யாணம் தேவையில்லன்னு..." என்று வீரா வேண்டுமென்றே சொல்ல, பதறிப் போனவளாக உடனே, "இல்லை அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எனக்.. எனக்கு இதில் முழு சம்மதம்" என்றாள் அவசரமாக.


லியோவோ அவளை சிரிப்பை அடக்கிக்கொண்டு பார்க்க, "அப்போ நாளைக்கே கோயில்ல வச்சு இவங்க கல்யாணத்த ஊருக்குள்ள நடத்திரலாம். அய்யோ கடவுளே, தலைக்கு மேல வேலை இருக்கு. வீரா... சீக்கிரம் என் கூட வா, கல்யாணத்துக்கான ஏற்பாட ஆரம்பிக்கலாம். மேகலா... அடியே மேகலா..." என்று கத்திக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் வைதேகி.


"அம்மா கொஞ்சம் அப்படிதான், நீங்க எதுவும் நினைச்சுக்க வேணாம்" என்று வீரா அசடுவழிந்தவாறு சொல்ல, அன்றே யாழ்மொழி மற்றும் லியோவின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன.


*****************

Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚