விழிகள் 19
அந்த பக்க குளத்தில் நீராடிக்கொண்டிருந்த ஜோடி அன்னங்களை விழிகளில் கண்ணீரோடும் இதழில் புன்னகையோடும் பார்த்த யாழ்மொழியை புரியாமல் பார்த்தான் லியோ.
"என்ன பார்க்குற?" என்ற அவனின் குரலில் இமை சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டவள், "அந்த ஜோடி அன்னங்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. அவைகளுடைய காதலுக்கு எந்த தடையும் இல்லை. அந்த சுதந்திரம் கூட எனக்கு இல்லையே என்ற ஏக்கம்தான்" என்று பேசிக்கொண்டே சென்ற யாழ்மொழியின் வார்த்தைகளில் அத்தனை வலி.
ஒட்டி உரசி நீராடிக்கொண்டிருந்த ஜோடி அன்னங்களை ஒரு பார்வைப் பார்த்தவன், தன்னவளின் புறம் திரும்பி அவளையே விழி மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
யாழ்மொழியும் மெல்ல நிமிர்ந்துப் பார்த்தவள் அவனின் பார்வையில் முகம் சிவந்தவளாக மீண்டும் தலையை குனிந்துக்கொள்ள, "நீ சொல்றது சரிதான், ஆனா ஒரு சந்தேகம். அதுங்க காதல் ஜோடிங்கன்னு நீ எப்படி சொல்ற. ஒருவேள ரெண்டும் பொண்ணுங்களாவோ பசங்களாவோ கூட இருக்கலாமே!" என்று தன் பெரிய சந்தேகத்தைக் கேட்டு வைத்தான்.
அந்த கேள்வியில் அவனை முறைத்துப் பார்த்தவள், "இயற்கையை ரசிக்கக் கூட தெரியாத தாங்கள் எல்லாம் என்ன தான் பதவியில் இருக்கிறீர்களோ! கடவுளே..." என்று பொறுமிக்கொள்ள, "இதுக்கும் என் பதவிக்கும் என்ன சம்பந்தம, வாட் த ஹெல்..." என்று லியோவோ சலிப்பாக விழிகளை உருட்டிக்கொண்டான்.
தலையிலடித்துக்கொண்டு அவள் மென்மையாக புன்னகைக்க, அவளை நெருங்கி அமர்ந்தவன், "உன்னோட வலி என்னால புரிஞ்சுக்க முடியாது, ஆனா நான் ஒன்னு சொல்லட்டுமா! உன்னோட வாழ்க்கைய உனக்கு பிடிச்ச மாதிரி நீதான் அமைச்சுக்கணும். யாருக்கும் உன்ன அடக்கி ஆள உரிமை கிடையாது. உன்னோட கடைசி நிமிஷத்துல என்னால இந்த சுதந்திரத்த அனுபவிக்க முடியலன்னு நீ நினைச்சிட கூடாது யாழ்மொழி" என்றான் ஆழ்ந்த குரலில்.
அவனின் வார்த்தைகளில் அதிர்ந்த முகமாக அவனை சில கணங்கள் பார்த்துக்கொண்டிருந்தவள், "இத்தனை பேசும் தாங்கள் ஏன் இந்த மக்களை அடிமைப்படுத்த எண்ணுகிறீர்கள் அதிகாரி. சுதந்திரமாக விட்டு விடலாம் அல்லவா!" என்று கேட்க, இப்போது அதிர்ந்து விழிப்பது லியோவின் முறையானது.
அவளின் கேள்வி அவனின் இதயத்தை ஈட்டியால் குத்திக் கிழிப்பது போலிருக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தவன் அவளை விட்டு விலகப் போக, தன்னை மீறி அவனின் புஜத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தாள் யாழ்.
இதை எதிர்பார்க்காதவன் அவளின் மேல் மோதிவிட, பெண்ணவளின் முகமோ சொந்தாமரையாய் வெட்கத்தில் சிவந்தது.
"அது.. நான்... நான் ஏதாவது தவறாக பேசிவிட்டேனா" என்று வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைக்க முயற்சி செய்தவாறு திக்கித்திணறி அவள் கேட்க, அவளின் தடுமாற்றத்தை ரசித்துப் பார்த்தவனுக்கு விழிகளை அகற்ற முடியவில்லை.
இதுவரை அவன் பழகிய பெண்களிடம் இத்தனை வெட்கத்தையோ இந்த சிவந்த கன்னங்களையோ அவன் பார்த்தது கிடையாது.
ஒவ்வொன்றையும் அவனுக்கு புதிதாக கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தாள் யாழ்மொழி என்றுதான் சொல்ல வேண்டும்.
இருவரும் அத்தனை அருகாமையிலிருக்க, "யூ மெஸ்மரைஸிங் மீ யாழ்" என்று அவளையே ரசித்துப் பார்த்த வண்ணம் கிறக்கமான குரலில் சொன்னான் லியோ.
அவனின் வார்த்தைகளுக்கான அர்த்தம் அவளுக்கு சுத்தமாகத் தெரியவில்லை. ஆனால் அவனின் அந்த குரல் அவளுக்குள் ஏதோ செய்தது.
"இருவரின் தேசமும் வேறு, இருவரின் கலாச்சாரமும் வேறு. இருவரின் தகுதியும் வேறு. ஆனால் தங்களின் மீதான காதல் என்னை எதையும் உணர விடவில்லை அதிகாரி" என்று அவனின் இரு விழிகளையும் மாறி மாறிப் பார்த்தவாறு ஹஸ்கி குரலில் தன் மனதிலுள்ள காதலை அவள் சொல்லிவிட, இதை எதிர்பார்க்காதவனோ அதிர்ச்சியில் சிலையாகிவிட்டான்.
பெண்ணவளுக்கு பயத்தில் இதயம் படுவேகமாகத் துடித்தது. சந்தோஷம், பயம், பதட்டம், வெட்கம் என அனைத்து உணர்ச்சிகளும் அவளை சூழ்ந்துக்கொள்ள, அப்போதுதான் அவளுக்கு வீராவும் இந்திராவும் முத்தமிட்டுக்கொண்ட காட்சி ஞாபகத்திற்கு வந்தது.
அதை நினைத்துப் பார்த்தவளோ அவனின் விழிகளைப் பார்த்தவாறு மெல்ல பார்வையை அவனின் இதழ் மீது பதித்தாள்.
முயன்று தைரியத்தை வரவழைத்து சற்று முன்னே வந்து அவனின் இதழ் மீது தன்னிதழை ஒற்றி எடுத்து அவள் விலகி அமர்ந்துக்கொள்ள, அவளுக்கோ உடல் நடுங்க பயத்தில் வேகமாக மூச்சு வாங்க ஆரம்பித்தது.
ஆனால் லியோவின் எதிர்வினையே வேறு.
"என்ன இது?" என்று அவன் சாதாரணமாகக் கேட்க, "ஆங்.. அது.. கா.. காதலர்கள் முத்தம் கொடுத்துக்கொள்வது சகஜம்தானே. இது கூட தெரியாதா?" என்று பதிலுக்கு கேட்டு சிரித்தாள் யாழ்மொழி.
"ஆனா உனக்கு முத்தம் கொடுக்க கூட தெரியல்லயே யாழ்!" என்று குறும்பாக சொன்னவன் அவள் பின்னந்தலையைப் பற்றி தன் முகமருகே இழுத்து தலையை சரித்து அவளிதழை கவ்விக்கொள்ள, யாழ்மொழியோ விக்கித்துப் போய்விட்டாள்.
ஆனால் ஆடவனோ அவளிதழை சுவைத்துக்கொண்டே அவளுக்குள் மூழ்கத் தொடங்க, பெண்ணவளுக்கு இந்த புதிதான முத்தத்தில் மயக்கமே வந்துவிடும் போல இருந்தது.
பயத்தில் அவள் அவனின் சட்டைக்காலரை இறுக்கிப் பிடித்துக்கொள்ள, லியோவுக்கு அவளிதழ் தேனை விடக் கூட மனமில்லை.
தன் மனதை மயக்கியவளுடனான முதல் இதழ் முத்தத்தை அவன் ரசித்து அனுபவித்துக்கொண்டிருக்க, ஒருகட்டத்தில் விழிகளை மூடிக்கொண்ட யாழ்மொழியும் அவனுக்கு இசைந்துக் கொடுக்க ஆரம்பித்தாள்.
இருவரும் விலக மனமின்றி ஒருவருக்குள் ஒருவர் மூழ்கிக்கொண்டே போக, ஆடவனின் கரங்களோ அவளிடையை வளைத்து தன்னோடு நெருக்கிக்கொண்டிருந்தன.
சில கணங்கள் கடக்க முதலில் நடப்புக்கு வந்த லியோவுக்கு அப்போதுதான் தான் செய்யும் காரியமே உணர, மொத்த உணர்ச்சிகளும் அத்தோடு வடிந்துப் போனது.
உடனே தன்னிடமிருந்து அவளை தள்ளி விட்டவன் மூச்சு வாங்கியவாறு அவளைப் பார்க்க, யாழ்மொழியும் வேக மூச்சுக்களை விட்டவாறு தன்னவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
"அதிகாரி நான் ஏதாவது..." என்று பேச வந்தவளின் வார்த்தைகள் எதையும் அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
வேகமாக எழுந்தவன் அவன் பாட்டிற்கு தன் காரிலேறி அந்த இடத்தை விட்டே மின்னல் வேகத்தில் சென்றிருக்க, போகும் தன்னவனை புரியாது பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளோ தன் இதழை மெல்ல வருடினாள்.
அவனுடைய ஸ்பரிசமும் நெருக்கமும் வாசனையும் இன்னும் தன்னை சுற்றியே இருப்பது போல் அவளுக்குத் தோன்ற, அவளிதழில் வெட்கப் புன்னகைத் தோன்றியது.
அவனுடனான முத்தத்தையே நினைத்துப் பார்த்தவாறு அவள் காலார அரண்மனையை நோக்கி நடந்துச் செல்ல, இங்கு ஆங்கிலேய அரண்மனைக்கு முன் வண்டியை நிறுத்திய லியோவுக்கு யார் பேசுவதும் காதில் விழவில்லை.
வேகமாக தனது படுக்கையறைக்கு சென்றவன், கதவை சாற்றிவிட்டு அறையில் பதற்றமாக குறுக்கும்
நெடுக்குமாய் நடக்க ஆரம்பித்தான்.
'இல்ல, இது தப்பு. நான் இப்படி பண்ணியிருக்க கூடாது. ஒரு ப்ரிட்டிஷ் ஹையர் ஆஃபீசர் சாதாரண செர்வன்ட்கிட்ட மயங்குறதா! வாட் ரப்பிஷ், இது மட்டும் மத்தவங்களுக்கு தெரிஞ்சா என்னோட பதவில நான் இருக்குறதே பெரிய அவமானமா போயிரும். ஐ வில் நொட் லெட் எனிதிங் டிஸ்ட்ரோய் மை பவர். வெறும் என்டர்டெயின்மென்ட்காக பழகுறது பரவாயில்ல, ஆனா இது...'
என்று தலையை அழுந்தக் கோதி உணர்ச்சிகளை அவன் கட்டுப்படுத்த முயற்சிக்க, ஆனால் யாழ்மொழியின் முகமும் அவளுடனான முத்தமும் மீண்டும் மீண்டும் அவன் நினைவுக்கு வந்து அவனை பாடாய் படுத்தியது.
'இந்த உறவு சரியா வராது. ரெண்டு பேரும் ஒன்னா இருக்குறதுன்றதே சாத்தியமில்லாத ஒன்னு. ஒருவேள ரெண்டு பேரும் காதலிச்சா கூட காலம் முழுக்க சேர்ந்து வாழுறதுங்குறது இம்பாஸிபள். அவ என்னை காதலிக்கிறத இந்த நாட்டு மக்களால கொஞ்சமும் ஏத்துக்க முடியாது. இந்த உறவால எனக்கு மட்டுமில்ல அவளுக்குமே பாதிப்புதான். ரெண்டு பேரும் பிரியணும், அதான் விதி. இதுக்கப்பறம்...'
என்று தனக்குத்தானே சொன்னவாறு விழிகளை அழுந்த மூடிக்கொண்டவன் ஒரு முடிவு எடுத்தவனாக பட்டென்று விழிகளைத் திறந்தான்.
ஏனென்று புரியாத வலியில் மனம் பிசைய, அந்த உணர்வு பிடிக்காமல் சுவற்றில் ஓங்கிக் குத்தி தன் சிந்தனையை திசைத் திருப்ப முயற்சித்தான்.
ஆனால் அனைத்தும் தோல்வியே..
அதேநேரம் யாழ்மொழி அரண்மனைக்கு வர, "யாழ்மொழி, இத்தனை நேரம் எங்குதான் சென்றிருந்தாயோ! இளவரசி உன் மீது கடுங்கோபத்தில் இருப்பது போல் தெரிகிறது. விரைவாக சென்று என்னவென்று பார்" என்று மற்ற பணிப்பெண்களில் ஒருத்தி சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
அடுத்தகணம் வேகமாக இந்திராவின் அறையை நோக்கி ஓடியவள், உள்ளே நுழைந்து மூச்சு வாங்கியவாறு நின்றவளுக்கு ராதாவைப் பார்த்ததும் சர்வமும் அடங்கியது.
அங்கு இளவரசிக்கு முன்னே ராதா நின்றுக்கொண்டிருக்க, அரவம் உணர்ந்து திரும்பிப் பார்த்த இந்திரா, "யாழ்..." என்றழைத்தவாறு எழுந்து அவளை நோக்கி வர, யாழ்மொழிக்கு பயத்தில் இதயத் துடிப்பு ஓசை தன் காதிற்கே கேட்டது.
பயத்தில் அவள் எச்சிலை விழுங்கிக்கொள்ள, "ராதா அனைத்தையும் கூறிவிட்டாள், இதற்கு மேல் என்னிடம் மறைக்க முயற்சி செய்யாதே" என்ற இந்திராவை குற்றவுணர்ச்சியோடு பார்த்தவள் திரும்பி ராதாவைப் பார்க்க, அவளோ தலையை குனிந்துக்கொண்டாள்.
"அது இளவரசி.. நான்.. நான் தங்களிடம்..." என்று எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் தடுமாறியவள், ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு, "என்னை மன்னித்துவிடுங்கள்" என்று மட்டும் சொல்லி தலையை குனிந்துக்கொள்ள, அவள் நாடியைப் பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்தினாள் இந்திரா.
"உன் காதலை என்னிடம் மறைக்கும் அளவிற்கு நான் யாரோ ஒருத்தியாகி விட்டேனா யாழ், ஆனால் நீ காதலிப்பதை அறிந்து மெய்யாலுமே எனக்கு அத்தனை சந்தோஷம். யாழ்மொழியின் முடிவு எப்போதும் தவறாக போனதில்லை" என்று அவள் பேசிய வார்த்தைகளில் யாழ்மொழி அதிர்ந்தாலலோ இல்லையோ ராதாவுக்கு இது பேரிடியாக இருந்தது.
அவள் ஒன்றை நினைத்து இதை செய்திருக்க, இந்திராவின் எதிர்வினை அவள் நினைத்ததற்கு மேல் தலைகீழாக இருந்தது.
"இளவரசி..." என்று ஆனந்த அதிர்ச்சியோடு அவள் அழைக்க, உடனே தன் தோழியை அணைத்துக்கொண்டாள் மற்றவள்.
"உன்னால்தான் என் வீரா இப்போது உயிரோடு இருக்கிறான் யாழ், ஆரம்பத்தில் வீரா சொன்ன போது உன் மேல் சிறிய கோபம் எட்டிப் பார்த்தது என்னவோ உண்மைதான். ஆனால் ஆழமாக யோசித்துப் பார்த்ததும் தான் புரிந்தது. அந்த உயரதிகாரி உனக்காக அவரை கொல்ல வந்தவனையே உயிரோடு விட்டிருக்கிறார் என்றால் கண்டிப்பாக உனக்காக எதையும் செய்ய துணிவார் என்று" என்று இந்திரா சொல்ல, யாழ்மொழியோ அவளிடம் மறைத்ததை எண்ணி அழ ஆரம்பித்தாள்.
"என்னை மன்னித்துவிடுங்கள் இளவரசி, நான் ஒரு ஆங்கிலேயனை காதலிப்பது தெரிந்தால் தாங்கள் என்னை ஒதுக்கி விடுவீர்களோ என்ற பயத்திலேயே மறைத்துவிட்டேன். எனக்.. எனக்கு வேறு வழி தெரியவில்லை" என்று அவள் அழுத வண்ணமாய் சொல்ல, "புரிகிறது, ஆனால் ஒன்றை மட்டும் தெரிந்துக்கொள். இந்த காதலின் விளைவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அனைத்தையும் எதிர்க்க தயாராக இரு" என்றாள் இந்திரா அழுத்தமாக.
தோழி கூற வருவது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
"தாங்கள் என் மீது கோபப்படாமல் இருந்ததே நான் பாதி தூரத்தை கடந்த மாதிரிதான். இதுவே போதும் இளவரசி" என்ற யாழ்மொழிக்கு அத்தனை நிம்மதி.
அவளுடைய பார்வை இப்போது மற்ற தோழியின் மீது படிய, பற்களைக் கடித்துக்கொண்ட ராதா எதுவும் பேசாமல் அங்கிருந்து விறுவிறுவென்று வெளியேறி இருந்தாள்.
போகும் ராதாவை இந்திரா பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும், இப்போது யாழ்மொழிக்கு அவளின் செயலை குறித்து லேசான பயம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது.
அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், "காதலிக்கிறோமே, கொஞ்சமாவது பொறுப்பென்று ஒன்று இருக்கிறதா! இரண்டு நாட்களாக அவரை தேடுகிறேன், என்னை பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்று கூட அவருக்கு தோன்றவில்லை. ச்சே! அவர் மட்டும் என் எதிரில் வரட்டும், அப்போது வைத்துக் கொள்கிறேன்" என்று யாழ்மொழி படபடவென பொரிந்துக்கொண்டே போக, வரைந்தவாறு அவளைப் பார்த்துக்கொண்டிருந்த இந்திராவுக்கு சிரிப்புதான் வந்தது.
"இப்போது புரிகிறதா, என் மனநிலை உனக்கு? அப்போதெல்லாம் என்னையே கிண்டல் செய்வாய், ஆனால் இப்போது.." என்று சொல்லி அவள் மேலும் சிரிக்க, தலையிலடித்துக்கொண்டாள் மற்றவள்.
அன்று நேரம் மாலையை நெருங்க, தன்னவனை காண எண்ணி யாழ்மொழி சந்தை, வயல் என அவனை சந்திக்கும் இடங்களுக்கு செல்ல, சரியாக ஜேம்ஸ்ஸோடு ஒரு இடத்தில் நின்றிருந்தான் லியோ.
"மொதல்ல இந்த காரை சேன்ஜ் பண்ணு ஜேம்ஸ், அடுத்த முறை இப்படி நின்னுச்சுன்னா நீ காரை பேளஸ் வரைக்கும் தள்ளிட்டு போக வேண்டி இருக்கும் சொல்லிட்டேன்" என்று அவன் கடுப்பில் கத்திக்கொண்டிருக்க, அவனைப் பார்த்ததும் உற்சாகமாகி அவனை நோக்கி ஓடினாள் யாழ்.
"அதிகாரி, ஏன் என்னை சந்திக்க தாங்கள் வரவே இல்லை? உங்களைத் தேடி அலைந்தே களைத்துப் போய்விட்டேன்" என்று மூச்சு வாங்கியவாறு திக்கித் திணறி அவள் சொல்ல, அவளை அதிர்ந்துப் பார்த்தவன் உடனே தன் முகபாவனையை மாற்றி அவளை உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட ஒரு பார்வைப் பார்த்தான்.
"சார், கார் ரெடி" என்று சரியாக ஜேம்ஸ் குரல் கொடுக்க, தன்னை கண்டுகொள்ளாதது போல் காரில் ஏறப் போனவனின் முன் சென்று நின்றவள், "ஏன் என்னிடம் பேச மறுக்கிறீர்கள், நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா! ஒருவேளை அன்று நான் தவறாக முத்தம் கொடுத்தேனா, அதற்குதான் கோபமா?" என்று ஏதேதோ பேசிக்கொண்டு போக, சலிப்பாக விழிகளை உருட்டினான் அவன்
"இங்க பாரு, நான் ப்ரிட்டிஷுக்கு கீழ வேலை பார்க்குறவன், இந்த அதிகாரம் பதவிக்காக நான் நிறைய விஷயங்கள தியாகம் பண்ணியிருக்கேன். உன்னால இதுக்கு எந்த கலங்கமும் வர நான் விட மாட்டேன், புரியுதா.." என்று அவன் கிட்டத்தட்ட கத்த, "அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?" என்று புரியாமல் கேட்டாள் யாழ்மொழி.
"நான் உன் கூட பழகுறது உயர் பதவியில இருக்குற எனக்குதான் அவமானம், என்ட் எனக்கு உன் மேல காதல் இல்லை யாழ். நாம ரெண்டு பேரும் ரெண்டு விதமான திசையில இருக்கோம். ஒன்னா இருக்குறது சாத்தியமே இல்லை. உன்னை விட என் நாடும் பதவியும்தான் எனக்கு முக்கியம். அதனால... தேவையில்லாத ஆசைகள நீ மனசுல வளர்த்துக்காத"
என்று அவன் வாய்க்கு வந்ததை பேசிவிட்டு அவள் முகத்தைப் பார்க்க, அடுத்தகணம் யாழ்மொழியின் பார்வையில் லியோவுக்கு உள்ளுக்குள் சுள்ளென்று இருந்தது.
**************
என்னோட மற்ற கதைகளை படிக்க 👇 (kobo app)
India link >>
Usa link >>>
'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>
India link 👇
https://www.amazon.in/dp/B0FLYRBNZG
Usa link 👇
https://www.amazon.com/dp/B0FLYRBNZG
என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>
INDIA link👇
https://www.amazon.in/dp/B0FL2S9LYC
USA link 👇
https://www.amazon.com/dp/B0FL2S9LYC
Comments
Post a Comment