மையவிழிப் பார்வை 18
உயிரற்ற சடலமாக மீராவின் உடல் தரையில் கிடக்க, தன்னிரு கால்களைக் கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்தவாறு தங்கையின் முகத்தையே பார்த்திருந்தாள் நந்தினி.
சுற்றி அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் தெரிந்த உறவினர்கள் என வீட்டினுள்ளும் வெளியிலும் சூழ்ந்திருக்க, எவருடைய வார்த்தைகளும் அவளுடைய காதில் விழவில்லை.
எல்லாமே சூனியமான உணர்வு!
உறவினர்களே முன்னே நின்று இறந்தவளுக்கு செய்ய வேண்டிய காரியத்தை செய்து முடிக்க, நந்தினியோ பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாளே தவிர ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.
சடலத்தையும் காரியத்துக்காக அங்கிருந்து எடுத்துச் செல்ல, அப்போதும் அசையாமல் அமர்ந்திருந்த நந்தினியின் முகம் அங்கிருந்த எல்லோரின் மனதிலும் ஆழமாகப் பதித்து போனதுதான் உண்மை.
நடந்தது அனைத்தையும் வைஷ்ணவி சொல்லி முடிக்க, அவள் சொன்னதைக் கேட்டு ஆராதியா அதிர்ந்துப் போய் நின்றிருந்தாள் என்றால், அங்கு ப்ரணவ் சொன்னதைக் கேட்டு உறைந்துப் போய்விட்டான் ஹர்ஷத்.
"நந்தினி அவங்கள கொன்னதுல தப்பே இல்லை" என்று அவனுடைய இதழ்கள் குறையாத அதிர்ச்சியோடு முணுமுணுக்க, "ஆனா, அதை சட்டம் ஏத்துக்காது ஹர்ஷா. என்ட், இன்னொரு விஷயம் என்னன்னா அந்த லிஸ்ட்ல இப்போ வைஷ்ணவியும் இருக்கா" என்றான் ப்ரணவ் அழுத்தமாக.
"வாட்! அவ.. அவ எதுக்கு? ஏன் வைஷ்ணவிய கொல்ல நினைக்கணும்?" என்று அதே திகைப்போடு அவன் கேட்க, "வைஷ்ணவி ஃபார்ஸ் பண்ணலன்னா மீரா அந்த டூருக்கு போயிருக்கவே மாட்டா. என்ட், இப்படி ஒன்னு நடந்தது தெரிஞ்சும் அமைதியா இருந்திருக்கா. அதான்..." என்ற ப்ரணவின் வார்த்தைகளில் ஹர்ஷாவுக்கு தலை சுற்றாத குறைதான்.
"இதை விடக் கூடாது ப்ரணவ், வைஷுவ காப்பாத்தணும். ஆனா... ச்சே! நந்தினி இல்லன்னா இதையெல்லாம் யார் பண்ணியிருப்பான்னு கொஞ்சம் கூட யூகிக்க முடியல. மீரா கூட வைஷ்ணவி பழகியிருக்கா, அவ காதலிச்ச பையன கூட அவளுக்கு தெரியல்லையா என்ன!" என்று ஹர்ஷா நெற்றி நரம்புகள் புடைக்க கேட்க, இல்லையெனும் விதமாக தலையசைத்தான் மற்றவன்.
இருவருக்கும் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பதென்று கூட தெரியவில்லை.
அங்கிருந்து வீட்டிற்கு சென்றவன், தளர்ந்த நடையாக அறைக்குள் செல்லப் போக, திடீரென அவனை அழைத்து நிறுத்தினான் அபிமன்யு.
"அண்ணா, என்னாச்சு? நியூஸ்ல பார்த்தேன். க்ரிஷையும் கொன்னிருக்கான்ல, நிஜமாவே சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியல. இதெல்லாம் என் ஃப்ரென்ட்ஸ்ஸா இருக்குறததான் என்னால ஏத்துக்க முடியல. கடைசியா அந்த டூர்லதான் நாங்க ஹேப்பியா ஒன்னா இருந்தோம். ச்சே!" என்று வார்த்தைகளில் வலியோடு அவன் சொல்ல, எதுவும் பேசாமல் அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அறைக்குள் சென்று அடைந்துக்கொண்டான் ஹர்ஷா.
கட்டிலில் அப்படியே பொத்தென்று விழுந்தவனுக்கு நடக்கும் சம்பவங்கள்தான் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
"யார் அது?" என்ற கேள்வி மட்டும் அவனுடைய சிந்தனையில் சுழன்றுக்கொண்டிருக்க, விழிகளை மெல்ல மூடிக்கொண்டான் அவன்.
பல நிமிடங்கள் கடந்திருக்கும். திடீரென மூளையில் ஒரு மின்னல் வெட்டியது.
அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தவனின் இதழ்கள், "க்ரிஷ் இருக்குற இடம் அந்த கொலைகாரனுக்கு எப்படி தெரிஞ்சது?" என்று கேள்வியோடு முணுமுணுக்க, உடனே ஆராதியாவுக்கு அழைத்தான்.
"ஹெலோ..." என்று ஆராதியா சொன்னதும்தான் தாமதம், அடுத்தகணம் "க்ரிஷ் இருக்குற இடத்தை யார்கிட்டயாச்சும் சொன்னியா ஆரு?" என்று கேட்டான் அவன் அழுத்தமாக.
"அது... இல்லை ஹர்ஷா, நான் யார்கிட்டேயும் சொல்லல. வைஷ்ணவிக்கு கூட" என்று அவள் சொல்ல, எந்த பதிலும் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்தவன் அடுத்த அழைப்பு ப்ரணவிற்குதான் அழைத்தான்.
அவனிடமும் ஹர்ஷா தன் சந்தேகத்தைக் கேட்க, "அதுக்கான ஏற்பாடு பண்ணதே நான்தான், நான் எப்படி அதை வெளியாளுங்ககிட்ட சொல்லியிருக்க முடியும்? ஆனா நீங்க சந்தேகப்பட்ட மாதிரி கண்டிப்பா எங்க மூலமாதான் க்ரிஷ் பத்தி அவனுக்கு தெரிஞ்சிருக்கு. நீங்க நல்லா யோசிச்சு பாருங்க ஹர்ஷா" என்று ப்ரணவ் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, மற்றவனின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.
"ஆமா, என் மூலமா கூட போயிருக்கலாம்ல! நான் யார்கிட்ட சொன்னேன். எதுவும் ஞாபகம் வர மாட்டேங்குதே, யார் அது?" என்று அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டு அவன் தீவிரமாக யோசிக்க, அவனின் மனக்கண் முன் வந்து சென்றது அந்த ஒரு முகம்.
"அவனா இருக்குமா... இல்லை, வாய்ப்பே இல்லை. இருக்கக் கூடாது. ஆனா... ஒருவேள இருந்தா?"
அவனுக்குள் ஏகப்பட்ட கேள்விகள் எழ, தலையைத் தாங்கிக்கொண்டவாறு அப்படியே கட்டிலில் அமர்ந்தான் ஹர்ஷா. சில கணங்கள் அவனால் எதையும் யோசிக்க முடியவில்லை.
ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவன் ஒரு முடிவெடுத்தவனாக அறையிலிருந்து வெளியேறியிருக்க, அன்றைய நாள் கழிந்து அடுத்த நாளும் விடிந்தது.
அன்று காலையிலயே ஹர்ஷா ப்ரணவின் வீட்டின் முன் நிற்க, ஸ்டேஷனுக்கு செல்வதற்காக தயாராகி கதவைத் திறந்தவனுக்கு வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்ததும் அத்தனை அதிர்ச்சியாக இருந்தது.
"ஹர்ஷா! நீங்க இங்க..." என்று அவன் விழிகளில் கேள்வியோடு இழுக்க, "அனிதா இறந்தப்போ அவ உடம்புல அவளுக்கு சம்பந்தமே இல்லாத டீஎன்ஏ கிடைச்சதா சொன்னீங்க. இப்போ வரைக்கும் அந்த டீஎன்ஏ யார் கூடவும் மேட்ச் ஆகல. இது... இதுல ஒருத்தங்களோட ஹெயார் இருக்கு. இந்த டீஎன்ஏ கூட மேட்ச் ஆகுதான்னு பாருங்க. இதை இப்போவே லேப்புக்கு கொடுங்க" என்றான் ஹர்ஷா முகம் இறுக.
அவனுடைய சிவந்த விழிகளையும் இறுகிய முகத்தையும் பார்த்த ப்ரணவிற்கு ஏதோ ஒன்று சரியில்லை என்று மட்டும் புரிய, யோசனையோடு அதை வாங்கிக்கொண்டவன், "யாரோட சேம்பிள் இது?" என்று கேட்டான் விழிகளில் கேள்வியோடு.
"அது... அது வந்து.. நீங்க மொதல்ல டெஸ்ட் பண்ணுங்க. அப்பறமா சொல்றேன்" என்றுவிட்டு அதற்குமேல் அங்கு நிற்காமல் அவன் வெளியேறிவிட, ப்ரணவிற்கு ஏதோ ஒன்று தவறாகத் தோன்றியது.
அடுத்தகணமே அதை எடுத்துக்கொண்டு லேபிற்கு சென்றவன் டீஎன்ஏ பரிசோதனைக்கு கொடுத்துவிட்டு வெளியேறியிருக்க, இங்கு ஆராதியாவோ சேனல்களை மாற்றியவாறு எங்கோ வெறித்துக்கொண்டு யோசனையில் அமர்ந்திருந்தாள்.
"என்னடீ எப்போ பாரு யோசனையிலயே இருக்க? இன்னைக்கு வேலை இல்லையா என்ன?" என்று லலிதா காய்கறிகளை நறுக்கியவாறு கேட்க, "ஒன்னும் இல்லைம்மா" என்றவளின் முகத்தை விழிகளை கூர்மையாக்கிப் பார்த்தார் அவர்.
"ஏய் தியா, நீ அந்த பையன் கூட சரியா பேசுறது இல்லையா என்ன! ஆரம்பத்துல நான் கூட அந்த பையன தப்பா நினைச்சுட்டேன். ஆனா வெளித்தோற்றத்தை வச்சு ஒரு மனுஷன எடை போடக் கூடாதுன்னு சொல்வாங்க. அது நிஜம்தான் தியா, அன்னைக்கு நீ ஹாஸ்பிடல்ல மயங்கியிருந்தப்போ அந்த பையன் அழுத வண்ணமா இருந்தான். உன்னை விட்டு எங்கேயும் போகல. ராத்திரி கூட உன் பக்கத்துலயே இருந்தான்னா பாரேன். இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சதும் ஒரு நல்ல நாளா பார்த்து அவங்க வீட்டால உன்னை பொண்ணு கேட்டு வர சொல்லு, பேசி முடிச்சிடலாம்"
என்று லலிதா பேசிக்கொண்டே போக, ஹர்ஷத்தைப் பற்றிய தன் தாயின் வார்த்தைகளில் மெல்ல புன்னகைத்தாள் ஆராதியா.
குழப்பங்கள் லேசாக குறைந்து தன்னவன் பற்றிய சிந்தனையில் மனதில் இதம் பரவ அவள் அமர்ந்திருக்க, அவளுடைய நிம்மதியை கலைப்பது போல் அவளுக்கு வந்தது ஒரு அழைப்பு.
திரையைப் பார்த்தவள் யாருடைய எண் என்ற கேள்வியோடு அதையேற்று காதில் வைக்க, மறுமுனையில் காதைக் கிழிக்கும் க்ரீச் என்ற சத்தத்தில் அதிர்ந்து விழித்தாள் ஆராதியா.
அந்த சத்தத்தோடு ஏகப்பட்ட அழு குரல்களும் கதறலும் மாறி மாறிக் கேட்க, இவளுக்கோ உடலெல்லாம் வியர்க்க ஆரம்பித்து வேகமாக மூச்சு வாங்க ஆரம்பித்தது.
மகளின் முகத்தையே பார்த்திருந்த லலிதாவுக்கு ஏதோ ஒன்று தவறாகத் தோன்ற, அவள் மூச்சு வாங்க ஆரம்பித்ததும், "தியா... தியா..." என்ற அலறலோடு வேகமாக அறைக்கு ஓடி அவளுடைய இன்ஹேலரை தேடி எடுத்தார்.
அவளிடம் நீட்டியதும் வேகமாக அதை வாங்கி உபயோகித்தவள், தன்னை ஆசுவாசப்படுத்தியவாறு அமர்ந்திருக்க, "இப்போ பரவாயில்லையாடா? யார் ஃபோன்ல, ஏதாச்சும் பிரச்சனையா?" என்று பதற்றமாகக் கேட்டார் லலிதா.
"எனக்.. எனக்கு இப்போவே ஹர்ஷாவ பார்க்கணும்" என்று அவள் சொல்ல, உடனே ஹர்ஷாவுக்கு அழைத்து விடயத்தை சொன்னார் பெரியவர்.
அப்போதுதான் ப்ரணவிடம் டீஎன்ஏ பரிசோதனைக்காக சேம்பிளை கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தவன் விடயத்தை கேள்விப்பட்டதுமே தன்னவளின் வீட்டை நோக்கி வண்டியை பறக்கவிட்டான்.
இவன் உள்ளே நுழைய, தன் தாயை அணைத்து ஆராதியா அழுதுக்கொண்டிருக்கும் காட்சிதான் அவனுடைய விழிகளுக்கு தென்பட்டது.
"ஆரு..." என்றுக்கொண்டே வேகமாக அவளருகே ஓடியவன், "என்னாச்சு, என்னன்னு சொல்லு?" என்று பதற்றமாகக் கேட்க, "அது.. எனக்கு ஒரு கால் வந்துச்சு. அதுல ஏகப்பட்ட பேரோட கதறல் கேட்டிச்சு. எனக்.. எனக்கு பயமா இருக்கு ஹர்ஷா..." என்று அவன் மார்பில் புதைந்து அழத் தொடங்கினாள் ஆராதியா.
இவனுக்கோ ஒருகணம் அவள் சொல்வது எதுவும் சுத்தமாகப் புரியவில்லை.
அவளை புரியாமல் பார்த்தவன், "ஆரு, உன் ஃபோன்ல எந்த கால் வந்தாலும் ஆட்டோ ரெக்கார்ட் ஆன்லதானே இருக்கு?" என்று கேட்க, அழுத வண்ணமாக அவளும் தலையாட்டி வைக்க, அடுத்தகணம் இறுதியாக வந்த அழைப்பின் ரெக்கார்ட்டை தேடி எடுத்தான் ஹர்ஷா.
அதை ஆன் செய்து காதிற்கு அருகில் வைத்ததும்தான் தாமதம், உயிரை நடுங்க வைக்கும் கதறல் ஒலிகளில் அவனுக்கே திக்கென்று இருந்தது.
"வாட் த ****...." என்று கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டு அலைப்பேசியை தள்ளி வைத்தவனுக்கு அந்த கதறல்களுக்கு மத்தியில் ஒரு குரல் மட்டும் ஏதோ பழக்கப்பட்ட குரலாகத் தோன்ற, அதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் அவன்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்தவனின் விழிகள் அது யாரென்று உணர்ந்ததுமே ஆச்சரியத்தில் விரிய, "ப்ரீத்தி..." என்று இதழ்கள் முணுமுணுத்தன.
"என்ன ஹர்ஷா?" என்று ஆராதியா விழிகளை சுருக்கிக் கேட்க, "இது ப்ரீத்தியோட வாய்ஸ் ஆரு, ஐ நோ தட். ஆனா... அது எப்படி? அப்போ இதுல கேக்குற எல்லா வாய்ஸும் இறந்து போனவங்களோட கதறல்தானா? ஹவ் டேர் இஸ் ஹீ..." என்று பற்களைக் கடித்தான் அவன்.
இப்போதுதான் அவளுக்கும் அவன் சொல்ல வருவது புரிய, அதிர்ந்துப் போய் பார்த்தவள், தலையைத் தாங்கிய வண்ணம் அப்படியே அமர்ந்தவாறு, "அவ.. அவன் எதுக்கு எனக்கு கால் பண்ணணும்? ஏன் ஹர்ஷா, நா.. நான் என்ன பண்ணேன்?" என்று திகைத்துப் போய் கேட்டாள்.
அவனோ லலிதாவை ஒரு பார்வைப் பார்த்தவன், "அது.. ஆரு இது நமக்கான ஒரு வார்னிங். எனக்கு எப்படி இதை உன்கிட்ட சொல்றதுன்னு தெரியல, ஆமா.. வைஷு... வைஷு எங்க?" என்று அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக சுற்றிமுற்றி பார்த்தபடி கேட்க, "அவ வெளியில போயிருக்கா ஹர்ஷா" என்றாள் ஆராதியா குழப்பத்தோடு.
"வெளியிலயா! எங்கன்னு சொன்னாளா?" என்று ஹர்ஷா பதற்றமாகக் கேட்க, "அது... வழக்கமா போற அவ ஃப்ரென்ட் வீடுதான். ப்ரணவ் கூட தங்கியிருக்காரே, அந்த ஃப்ளாட்தான்" என்று அவள் சொல்ல, அவனோ வேகமாக வைஷ்ணவிக்கு அழைத்தான்.
ஆனால், அழைப்பு ஏற்கப்பட்டால்தானே!
"என்னாச்சு ஹர்ஷா, என்னன்னு சொல்லு" என்று ஆராதியா பயத்தோடுக் கேட்க, கோபத்தில் கை முஷ்டியை இறுக்கி சுவற்றில் ஓங்கிக் குத்தியவன், "வைஷ்ணவி ஆபத்துல இருக்கா ஆரு, நான் உடனே போய் அவள பார்க்கணும்" என்று சொல்லிவிட்டு அவர்களின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வெளியேறிவிட, இங்கு லலிதாவோ நெஞ்சில் கை வைத்தபடி அப்படியே தரையில் விழுந்தார்.
"என் பொண்ணு... என் பொண்ணுக்கு என்ன? என்ன நடக்குது தியா இங்க? அந்த பையன் என்ன சொல்லிட்டு போறாரு, எனக்கு பயமா இருக்குடீ" என்று பெரியவர் அழ ஆரம்பிக்க, தன் தாயை தேற்றும் வழி தெரியாது திணறியவளுக்கு உலகமே சூனியமான உணர்வு.
ஹர்ஷாவோ வேகமாக அந்த ஃப்ளாட்டிற்கு சென்றவன், லிஃப்டிற்கு கூட காத்திருக்காமல் படிகளில் மூச்சிறைக்க தாவி குதித்து வேகமாக ஓடி வைஷ்ணவியின் தோழி தங்கியிருக்கும் ஃப்ளாட்டின் முன் நின்று தடதடவென கதவைத் தட்டினான்.
அடுத்த சில கணங்களிலேயே கதவு திறக்கப்பட, "நீங்க..." என்று அவன் முன்னாலிருந்த இளம் பெண் அவனை கூர்ந்து பார்த்தபடி இழுக்க, "வைஷ்ணவி... வைஷ்ணவி..." என்று அந்த கட்டிடமே அதிரக் கத்தினான் ஹர்ஷா.
அவன் கத்திய கத்தலில் அறையிலிருந்த வைஷ்ணவி வேகமாக வெளியில் வந்து எட்டிப் பார்த்து, "மாமா, நீங்க இங்க என்ன பண்றீங்க?" என்று அதிர்ச்சியோடுக் கேட்க, முட்டியில் இரு கைகளை ஊன்றி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அப்படியே நின்றிருந்தவனுக்கு அப்போதுதான் உயிரே வந்த உணர்வு.
அவளோ அவனையே விக்கித்துப் போய் பார்த்தவாறு நின்றிருக்க, எதுவும் பேசாமல் அவளின் கரத்தைப் பற்றி இழுத்துக்கொண்டு சென்றவன் அந்த கட்டிடத்திலிருந்து வெளியில் வரும் வரை அவள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லவே இல்லை.
தன் பைக்கை உயிர்ப்பித்தவன் மின்னல் வேகத்தில் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றிருக்க, யோசனையோடு உள்ளே நுழைந்தவளைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவளை அணைத்துக்கொண்டார் லலிதா.
"அந்த கடவுள் புண்ணியத்தால உனக்கு எதுவும் ஆகல வைஷு, நாங்க ரொம்ப பயந்தே போயிட்டோம்" என்று ஆராதியா விழிகள் கலங்க சொல்ல, வைஷ்ணவியோ எதுவும் பேசவில்லை, அமைதியாக நின்றிருந்தாள்.
"அந்த கல்ப்ரிட்ட கண்டுபிடிக்குற வரைக்கும் நீ வீட்டுலயே இரு, ப்ரணவ்கிட்ட சொல்லி பாதுகாப்புக்கு நான் ஏற்பாடு பண்றேன். புரியுதா?" என்று ஹர்ஷா சொல்ல, தலையாட்டியவள் தனதறைக்குள் சென்று கதவடைத்துக்கொள்ள, 'ஊஃப்ப்...' என நிம்மதி பெருமூச்சுவிட்டவாறு சுவற்றில் சாய்ந்துக்கொண்டான் அவன்.
அவனை விழிநீரும் இதழில் புன்னகையுமாக பார்த்திருந்த ஆராதியா இடம் பொருள் பாராது வேகமாகச் சென்று அவனை இறுக அணைத்திருக்க, இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ஹர்ஷா.
"ஆரு..." என்று அவன் அதிர்ச்சியோடு அழைக்க, "லவ் யூ ஹர்ஷா, இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல" என்றவள் லலிதா சமையலறையில் இருப்பதை பார்த்துவிட்டு அவனிதழில் இதழ் பதித்திருந்தாள்.
அவளிடையை வளைத்து தன்னோடு நெருக்கியவாறு விழிகளை மூடிக்கொண்டான் ஹர்ஷா.
அதன் பின் சில மணித்தியாலங்களில் ஹர்ஷா அங்கிருந்து வெளியேறியிருக்க, வெளிச்சம் மறைந்து உலகை இருள் சூழ ஆரம்பித்தது.
அதேநேரம் கால்களைக் கட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்த வைஷ்ணவியின் எண்ணிற்கு ஒரு அழைப்பு வர, திரையைப் பார்த்தவளின் விழிகள் சந்தேகத்தில் சுருங்கின.
************
Next Episode >>
https://agnitamilnovels.blogspot.com/2025/07/19.html
தஷுரி, ரதியின் ரணதீரன் கதைகள் Kobo writing life ல இருக்கு... கிட்டத்தட்ட அமேசன் மாதிரி தான்.. Kobo plus subscription பண்ணா மன்த்லி ஃப்ரீயா எல்லா கதைகளும் ரீட் பண்ணலாம்...
IN link 👇
USA link 👇
Comments
Post a Comment